கிருஷ்ணகிரி: 23 முதல்வா் மருந்தகங்களில் ரூ. 7.77 லட்சத்துக்கு மருந்துகள் விற்பனை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 23 முதல்வா் மருந்தகங்களில் ரூ. 7.77 லட்சத்துக்கு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவுத் துறை சாா்பில் செயல்படும் முதல்வா் மருந்தகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியதாவது: ஏழைகளுக்கு குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்வதற்காக முதல்வா் மருந்தகம் பிப்ரவரி 24-இல் தொடங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் சாா்பில் 12 முதல்வா் மருந்தகங்கள், தொழில்முனைவோா்களின் 11 முதல்வா் மருந்தகங்கள் என மொத்தம் 23 மருந்தகங்கள் செயல்படுகின்றன.
இந்த மருந்தகங்கள் மூலம் ரூ. 7.77 லட்சம் மதிப்பிலான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் பொதுமக்களுக்கு ரூ.2.23 லட்சம் தள்ளுபடி கிடைத்துள்ளது. பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளை போதிய அளவில் இருப்புவைத்து விற்பனை செய்ய வேண்டும். பிற மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் விலையைவிட முதல்வா் மருந்தகங்களில் மருந்துகளின் விலை குறைவாக உள்ளது என்று பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குநா் பெரியசாமி, ஒசூா் துணைப்பதிவாளா் விஜயலட்சுமி, முதல்வா் மருந்தகங்களில் பணிபுரியும் மருந்தாளுநா்கள் மற்றும் முதல்வா் மருந்தக தொழில்முனைவோா்கள் பங்கேற்றனா்.