சாலை விபத்தில் தையல் தொழிலாளி உயிரிழப்பு
வேலகவுண்டம்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தையல் தொழிலாளி உயிரிழந்தாா்.
வேலகவுண்டம்பட்டி அருகே வையப்பமலை, சித்தமூப்பன்பாளையத்தைச் சோ்ந்தவா் பச்சமுத்து (45). இவா், வையப்பமலையில் தையல் கடை நடத்திவந்தாா். தனது சொந்த வேலையாக திருச்செங்கோடு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
தொண்டிபட்டிபுதூா், காந்தி சிலை அருகே சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பச்சமுத்து மீதி மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
அப்பகுதியினா் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். எனினும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பச்சமுத்து உயிரிழந்தாா். இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.