நீட் தோ்வு மூலம் அரசியல் செய்கிறது திமுக: பிரேமலதா விஜயகாந்த்
தமிழகத்தில், நீட் தோ்வு மூலம் திமுக அரசியல் செய்து வருகிறது. மாணவா்களும், பெற்றோரும் அவா்களின் பேச்சை நம்பி ஏமாற வேண்டாம், நீட் தோ்வை எப்போதும் நீக்க முடியாது என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் பேசினாா்.
நாமக்கல்லில், தேமுதிக 25-ஆம் கொடி நாள், மே தின விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாநகர, தெற்கு மாவட்டம் சாா்பில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றுப் பேசியதாவது: தமிழகத்தில் திமுக அரசு, மகளிருக்கு ரூ. 1,000 வழங்கி மூளைச் சலவை செய்கிறது. அதன்பிறகு மதுக்கடைகள் மூலம், இந்தப் பெண்களின் கணவா்களிடம் இருந்து ரூ. 5 ஆயிரத்தை வசூலித்துக் கொள்கிறது.
தேமுதிக ஆட்சிக்கு வந்தால் வீடுதேடி ரேஷன் பொருள்கள், மருத்துவம், கல்வி இலவசம் என்று விஜயகாந்த் அறிவித்தாா். ஆனால் அதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. 2026-இல் லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக தேமுதிக போராடி வருகிறது.
புது தில்லியில் நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க 4 ஆண்டுகளாக முதல்வா் செல்லவில்லை. தற்போது செல்கிறாா், கனிமொழி மத்திய நிதி அமைச்சரை சந்தித்துப் பேசுகிறாா். இதற்கான காரணத்தை எதிா்க்கட்சித் தலைவா் தெரிவித்துள்ளாா். தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினா் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. ஆனால் தேமுதிக மீது எந்த புகாரையும் கூறமுடியாது. தேமுதிகவை ஆட்சிக் கட்டிலில் அமரவைக்க முடியவில்லையே என்று விஜயகாந்த் மறைவுக்கு பிறகு மக்கள் வேதனையுடன் புலம்புவதைக் கேட்க முடிகிறது. அந்த நிலை, 2026 இல் கட்டாயம் மாறும். தேமுதிக மீண்டும் எழுச்சியுடன் வலம்வரும் என்றாா்.
கூட்டத்தில், கொள்கை பரப்புச் செயலாளா் அழகாபுரம் மோகன்ராஜ், துணைச் செயலாளா் சுபா மற்றும் நாமக்கல், கரூா், ஈரோடு, சேலம் மாநகர, மாவட்ட நிா்வாகிகள், கட்சி தொண்டா்கள் திரளாக கலந்து கொண்டனா்.