சா்வதேச புக்கா் பரிசுக்கு கன்னட பெண் எழுத்தாளா் பானுமுஷ்டாக் தோ்வு
மாநில அரசின் 'துணைவேந்தர் நியமன' அதிகாரம்; சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!
தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி இயற்றப்பட்ட சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம், சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான சட்டங்களை அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு. இந்த சட்டத்தை எதிர்த்து திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பிரதான மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டு, இடைக்கால தடை கோரிய மனு மீதான விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்திருந்தது.

இன்று, இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், தமிழக அரசின் சட்டங்களுக்கு தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்க அரசுத்தரப்புக்கு அவகாசம் வழங்க வேண்டும். சட்டங்கள் அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு, மொத்தமுள்ள 10 பல்கலைக்கழகங்களில் இரு பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே துணைவேந்தர் தேடுதல் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு விண்ணப்பங்களை வரவேற்று விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதுவும், ஜூன் 10 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க கூறப்பட்டுள்ளது. அதனால் தடை கோரிய வழக்கில் பதிலளிக்க அரசுத்தரப்புக்கு அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினார்.
தமிழக உயர்கல்வித் துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், துணைவேந்தர் நியமனம் தொடர்பான பல்கலைக்கழக மானியக் குழு விதிகளை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால் இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க எந்த அவசியமும் இல்லை. பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மனுதாரர், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். தடை கோரிய மனுக்களுக்கு பதிலளிக்க அவகாசம் தராமல் விசாரிப்பது முறையற்றது, நியாயமற்றது, அநீதியானது. வானம் இடிந்து விழுந்து விடாது என கடுமையான ஆட்சேபம் தெரிவித்தார்.

இருப்பினும், மனுதாரர் தரப்பில் இடைக்கால தடை கோரிய மனு மீது வாதங்களை முன் வைக்க நீதிபதிகள் அனுமதியளித்ததை அடுத்து, மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், பல்கலைக்கழகங்களை அரசியல் சக்திகளிடம் இருந்து பாதுகாக்கவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும், துணைவேந்தர் நியமிக்கும் நடைமுறை துவங்கப்பட்டு விட்டது. துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளுக்கு முரணாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அமலுக்கு வந்துள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தில் சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. தேடுதல் குழு நியமித்தது பல்கலைக்கழக மானியக் குழுவின் அதிகாரத்துக்கு உட்பட்டது அல்ல. பல்கலைக்கழக மானியக் குழு விதிகளை விட தமிழக அரசின் சட்டம் மேலோங்கி நிற்கும் என வாதிட்டார்.
பல்கலைக்கழக மானியக்குழுவிடம் இருந்து எந்த நிதியுதவியும் பெறாத நிலையில், தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம் குறித்த விதிகளை ஏற்க மறுத்து 2021 ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழக அரசு சட்டங்கள் சட்டவிரோதமானதல்ல.
யூகத்தின் அடிப்படையில் சட்டங்களுக்கு தடை விதிக்க முடியாது. விரிவான வாதங்கள் முன்வைக்க வேண்டியுள்ளதால், பதில்மனு தாக்கல் செய்ய 2 வாரகால அவகாசம் வழங்க வேண்டும் என தலைமை வழக்கறிஞர் வாதிட்டார்.
பிரதான சட்டத்தில் பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதியை நியமிக்க கூறவில்லை. தற்போதைய சட்டம் கூட, வேந்தர் என்பதற்கு பதில் அரசு என்ற திருத்தம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது எனவும் தலைமை வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
உயர்கல்வித் துறை செயலாளர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், வாதங்களை முன்வைக்க அவகாசம் கோரினார். விசாரணையை நாளைக்கு தள்ளிவைக்க கோரினார்.
இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைக்க மறுத்தனர்.

இதையடுத்து, மூத்த வழக்கறிஞர் வில்சன், இந்த இடைக்கால தடை கோரிய மனுவை விசாரித்தால், வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனு செல்லாததாகி விடும். முக்கிய ஆதாரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. நாளை இரு மணி நேரம் அவகாசம் வழங்க வேண்டும். தேடுதல் குழு நியமநத்தை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யவில்லை. துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை வேந்தரிடம் இருந்து எடுத்து அரசுக்கு வழங்கியதை எதிர்த்து மட்டுமே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆளுநரை, பல்கலைக்கழக வேந்தர் என்ற நிலையில் இருந்து நீக்கவில்லை. துணைவேந்தர் நியமன அதிகாரம் மட்டுமே அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. மனுவுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள அரசிதழ் தவறானது. இந்த அரசிதழ் ஜோடிக்கப்பட்டது; உண்மையானதல்ல. இது மனுதாரருக்கு எப்படி வந்தது என விசாரிக்க வேண்டும். அவசரமாக விசாரிக்க வேண்டும் என எந்த காரணங்களும் மனுவில் தெரிவிக்கப்படவில்லை என வில்சன் தெரிவித்தார்.
பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், தமிழக அரசு சட்டங்கள், பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணானது என்றார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், துணைவேந்தர்களை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டப்பிரிவுகளுக்கு இடைக் கால தடை விதித்து உத்தரவிட்டனர்.