`ஓய்வு பெறும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம்’ - உச்ச நீதிமன்றம் அதிரடி
உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெற்றதற்கு பிறகு அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியங்களில் பல்வேறு பாகுபாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தன. குறிப்பாக வழக்கறிஞர்களாக இருந்து நீதிபதிகளாக பதவி ஏற்கும் நீதிபதிகளுககும் கீழமை நீதிமன்ற நீதிபதிகளாக இருந்து உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுபவர்களுக்கும் அவர்கள் ஓய்வு பெற்றதற்கு பிறகு வழங்கப்படும் ஓய்வூதியங்களில் பல்வேறு மாறுபாடுகள் இருக்கின்றது என்று குற்றம்சாட்டப்பட்டது.
குறிப்பாக 13 ஆண்டுகள் மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய நீதிபதி ஒருவர், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி பிறகு ஓய்வு பெற்றார். ஆனால் அவருக்கு ஓய்வூதியம் வழங்கும் பொழுது, முந்தைய 13 ஆண்டுகள் மாவட்ட நீதிபதி பணி காலத்தை கணக்கில் கொள்ளாமல் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த காலத்தை மட்டுமே எடுத்துக் கொண்டிருப்பதாகவும், இதனால் மாதத்திற்கு வெறும் பதினையாயிரம் ரூபாய் மட்டுமே ஓய்வூதியம் பெறும் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல கூடுதல் நீதிபதிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவதிலும் நிறைய பாகுபாடுகள் இருப்பதாகவும், இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இவை அனைத்தையும் சரி செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட பல உயர் நீதிமன்றங்களின் ஓய்வு பெற்ற நீதிபதிகள் மனு தாக்கல் செய்திருந்தனர்.
ஒரே மாதிரியான ஓய்வூதியம்
இந்த வழக்கு பல மாதங்களாக உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதில், ``நீதிபதிகள் தொடர்புடைய இந்திய அரசியல் சாசன சட்ட பிரிவுகளை முழுமையாக ஆராய்ந்ததில் எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் நீதிபதிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு தான் வந்திருப்பதாகவும், இதில் பழைய ஓய்வூதிய திட்டம் புதிய ஓய்வூதிய திட்டம் ஆகியவை, இத்தகைய பாகுபாட்டை உறுதி செய்யும் வகையில் தான் இருக்கின்றது. எனவே உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் ஒரு பதவி ஒரு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஒரு நீதிபதி எத்தனை ஆண்டுகள் பொறுப்பில் இருந்தாலும் எந்த வகையில் அவர் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் அனைவருக்கும் ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.

இந்த உத்தரவு கூடுதல் நீதிபதிகளுக்கும் பொருந்தும். அனைத்து நீதிபதிகளின் குடும்பத்தாருக்கு வழங்கப்படும் சலுகைகள் விதவை ஓய்வூதியம் உள்ளிட்டவையும் ஒரே மாதிரியாக வழங்கப்படும்” என்றும் தீர்ப்பில் தெரிவித்தார்.
ஏற்கனவே இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற போது, `சில ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை ஓய்வூதியம் பெறுவது பரிதாபகரமானது. அனைத்து விஷயங்களிலும் சட்டரீதியான அணுகுமுறையைக் கொண்டிருக்க முடியாது. சில நேரங்களில், ஒன்றிய அரசு மனிதாபிமான அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும்’ என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.