நாட்டைப் பாதுகாப்பதில் இந்திரா காந்தியைப் போல் இருக்க வேண்டும்: ரேவந்த் ரெட்டி!
பாகிஸ்தானுக்கு எதிரான போரிலும், வங்கதேசம் உருவானதிலும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பங்கு மறக்கமுடியாதது என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.
இந்திரா சோலார் கிரி ஜல விகாசம் திட்டத்தைத் தொடங்கிய பின்னர் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பொதுக்கூட்டத்தில் ரேவந்த் ரெட்டி உரையாற்றினார்.
ஏழைகளுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கியதன் காரணமாக, 50 ஆண்டுக்கால ஆட்சிக்குப் பிறகும், தொலைதூரப் பகுதிகளில் கூட, இந்திரா காந்தி நினைவுகூரப்படுகிறார்.
நாட்டைப் பாதுகாப்பதில் இந்திரா காந்தியைப் போல இருக்க வேண்டும் என்று தான் உணர்வதாக அவர் கூறினார். பாகிஸ்தானுடன் போர் செய்து பாகிஸ்தானை இரண்டாகப் பிரித்தவர். ஒன்று பாகிஸ்தான் எனவும், மற்றொன்று வங்கதேசமாகவும் பிரிந்தது. நாட்டைப் பாதுகாக்கும் போரில் 54 ஆண்டுகளுக்கு முன்னரே இந்திரா காந்தி நிரூபித்துள்ளார் என்று அவர் உணர்ச்சியுடன் கூறினார்.
இந்தியா சோலார் கிரி ஜல விகாசம் திட்டத்தின் கீழ், ஏழை மக்களுக்கு சூரிய சக்தி பம்புசெட்கள் வழங்கப்படும் என்றும், அச்சம்பேட் சட்டப்பேரவைத் தொகுதியில் சூரிய சக்தி பம்புசெட்களை அரசு இலவசமாக வழங்கும். இதனால் ஏழைகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
பஹல்காமில் பாகிஸ்தான் மேற்கொண்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் போர் உருவாகக் காரணமாக அமைந்தது. பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.