ஆபரேஷன் சிந்தூர் மின்தடையின்போதும் பாகிஸ்தானுடன் தொடர்பில் இருந்த உளவாளிகள்!
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது வட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் மின்தடை இருந்தபோதும் கூட உளவாளிகள் பாகிஸ்தான் அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் அமைப்புகளுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உள்பட 4 உளவாளிகள் மின்தடையின்போதுகூட, ஆபரேஷன் சிந்தூர் தகவல்களை உளவு அமைப்புகளுக்குக் கொடுத்ததாக அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளனர்.
ஆபரேஷன் சிந்தூர் தொடங்குவதற்கு முந்தைய நாளான மே 6 ஆம் தேதி தில்லிக்குச் சென்றுள்ளார் ஜோதி மல்ஹோத்ரா. அங்கு பாகிஸ்தான் தூதரக அதிகாரி டேனிஷ் உடன் தொடர்பில் இருந்துள்ளார். அதோடு மட்டுமின்றி அடுத்த நாள், மற்ற சிலரையும் அவர் சந்தித்துள்ளார் எனத் தகவல்கள் கூறுகின்றன.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நவுமன் எலாஹ், என்பவரை மே 13 ஆம் தேதி ஹரியாணா காவல் துறையினர் கைது செய்தனர். இவர் பானிபட் பகுதியில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தவர்.
ஹரியாணா மாநிலம் கைத்தல் பகுதியைச் சேர்ந்த தேவேந்திர சிங் தில்லான், ஹிசார் பகுதியைச் சேர்ந்த மல்ஹோத்ரா, ஹரியாணாவின் நூக் மாவட்டத்தைச் சேர்ந்த அர்மான் ஆகிய நான்கு பேரை பயங்கரவாத தடுப்பு அமைப்பினர் கைது செய்தனர். இவர்கள் நான்கு பேரிடமும் வெவ்வேறு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.
கைது செய்யப்பட்ட 4 பேரும், பாகிஸ்தான் உளவு அமைப்புகளுடன் முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், விசாரணையின்போது இந்த நான்கு பேரும் மின்சாரம் துண்டிக்கப்பட்டபோது (ஆபரேஷன் சிந்தூர் பதிலடியின்போது வட இந்தியாவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது) கூட பாகிஸ்தான் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக ஹிசார் காவல் துறை கண்காணிப்பாளர் ஷஷாங்க் குமார் தெரிவித்தார்.
இதையும் படிக்க |பாகிஸ்தான் உளவாளிக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!