NEET: `கரண்ட் கட் ஆனதால் பாதிப்பு' - மாணவி வழக்கு; ரிசல்ட் வெளியிட தடை விதித்த உயர்நீதிமன்றம்!
`நீட் தேர்வின் போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவியொருவர் அளித்த புகாரை விசாரித்த மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் இந்தூர் அமர்வு, 2024 நீட்-யுஜி தேர்வு முடிவுகளை வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டுள்ளது.
மேலும், இப்புகார் குறித்து நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என தேசிய தேர்வு முகமை (NTA), மத்திய அரசு மற்றும் மத்தியப் பிரதேச மேற்கு மண்டலத்தின் மின்சார விநியோக நிறுவனத்திற்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நடைபெற்ற மே 4 அன்று, இந்தூரின் பல பகுதிகளில் மோசமான வானிலை நிலவியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இச்சூழலை காரணம் காட்டிய மாணவியொருவர், தன்னால் தனது செயல்திறனை சிறப்பாக தேர்வில் வெளிப்படுத்த இயலவில்லை என குற்றஞ்சாட்டினார்.
மேலும், நீட்-யுஜி தேர்வை எழுதுவதற்கான மீண்டுமொரு வாய்ப்பை நாடி தன் கோரிக்கையை நீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்தார்.
தேர்வு நாளன்று வானிலை தொடர்பான எச்சரிக்கையை வானிலை மையம் முன்பே வெளியிட்டிருந்த நிலையிலும், மின்சார துண்டிப்பை சமாளிக்க ஜெனரேட்டர் வசதி போன்ற எந்த ஏற்பாடையும் தேர்வு மையங்களில் செய்யவில்லை எனவும் பல தேர்வு மையங்களில், மூன்று மணி நேர தேர்வு நேரத்தில் இரண்டு மணி நேரம் மின்சாரமே இல்லை எனவும் தனது மனுவில் மாணவி குறிப்பிட்டிருந்தார்.
மாணவியின் மனுவை விசாரித்த நீதிபதி சுபோத் அபயங்கர், மாணவிக்கு இடைக்கால நிவாரணம் வழங்கியுள்ளார். மின்வெட்டால் மாணவியின் நுழைவு தேர்வு பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தேர்வின்போது அதிகாரிகள் சரியான நிபந்தனைகள் வழங்க தவறிவிட்டனர் எனவும் கூறியுள்ளார்.

வழக்கின் விசாரணையை ஜீன் 30-க்கு ஒத்திவைத்த நீதிமன்றம், நான்கு வாரத்திற்குள் மத்திய அரசு, தேசிய தேர்வு முகமை (NTA) மற்றும் மத்தியப் பிரதேச மேற்கு மண்டலத்தின் மின்சார விநியோக நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. வழக்கின் அடுத்த விசாரணை தேதி வரை, நீட் தேர்வின் முடிவுகள் வெளியிடப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வின் முடிவுகள் ஜீன் 14 அன்று வெளியாக இருந்தநிலையில், நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தேர்வு முடிவு வெளியாவது இன்னும் கால தாமதமாகும் வாய்ப்பு நிலவுகிறது. இவ்வழக்கின் முடிவு, இந்தியா முழுவதும் நீட் தேர்வு எழுதியுள்ள 21 லட்ச மாணாக்கரிடத்தில் தாக்கம் ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.