What to watch on Theatre: மாமன், DD Next Level, F. Destination, M.Impossible, Lo...
மா.சு மீதான வழக்கு: `விசாரணைக்கு ஒப்புதலை யாரிடம் பெறவேண்டும்?' - உச்ச நீதிமன்றத்தில் எழுந்த கேள்வி
மா. சுப்பிரமணியன் மேயராக இருந்தபோது செய்ததாகச் சொல்லப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்கு அவரை விசாரிப்பதற்கான ஒப்புதலை அரசிடம் பெற வேண்டுமா? அல்லது சபாநாயகர் இடம் பெற வேண்டுமா? என்ற முக்கிய கேள்வியை உச்ச நீதிமன்றம் எழுப்பி உள்ளது. இது தற்பொழுது அரசியல் சாசன கேள்வி ஆகவும் மாறி உள்ளது.
சிட்கோ நடைமுறையின் கீழ் கடந்த 1995 ஆம் ஆண்டு கர்ணன் என்பவருக்கு அரசு ஒதுக்கியத் தொழிலாளர்களுக்கான இடத்தை மா. சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சட்டவிரோதமாக வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்படும் அரசு நிலங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது.

ஒருவேளை அந்த தொழிலாளருக்கு அந்த இடம் தேவை இல்லை என்றால் அதை அரசிடம்தான் திருப்பி அளிக்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. ஆனால் இதை மீறி மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி அரசு நிலத்தை வாங்கி இருக்கிறார்கள். இதில் பெரிய அளவில் ஊழல் நடைபெற்று இருக்கிறது என புகார்கள் எழுந்தது.
இது சம்பந்தமாக கடந்த 2019 ஆம் ஆண்டு பார்த்திபன் என்பவர் புகார் அளிக்க மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்படுகின்றது.
சபாநாயகர் அனுமதி..!
இதனை அடுத்து, அப்போது சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த மா. சுப்பிரமணியனை விசாரிக்க அப்போது சபாநாயகராக இருந்த தனபால் அனுமதி வழங்குகிறார். கீழமை நீதிமன்றத்திலும் விசாரணை நடைபெறுகிறது.
இதற்கு எதிராக மா.சுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய, கீழமை நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 28-ஆம் தேதி ஏற்கனவே இருந்த தடை உத்தரவை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. இதனை அடுத்து விசாரணை நீதிமன்றமும் மா.சுப்பிரமணியனுக்கு சம்மன் அனுப்புகிறது.

இந்நிலையில்தான் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மா.சுப்பிரமணியன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுகின்றது.
இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுதன்சு துளியா மற்றும் வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.
அப்போது மா.சுப்பிரமணியன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, `மேயராக இருந்தபோது ஊழல் செய்ததாக தான் குற்றச்சாட்டு. மேயராக இருப்பவரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றால் அரசிடம் தான் ஒப்புதல் பெற வேண்டும்.
ஆனால் இந்த வழக்கில் விசாரிக்க சபாநாயகர் ஒப்புதல் வழங்கி இருக்கிறார். இது சட்ட நடைமுறையில் தவறானது. எனவே விசாரணையை ரத்து செய்ய வேண்டும்’ என வாதங்களை முன் வைத்தார்.
அப்போது புகார்தாரரானப் பார்த்திபன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் ஷர்மா மற்றும் மூத்த வழக்கறிஞர் சிராஜுதீன் ஆகியோர், `` இந்த வழக்கிற்கும் வைக்கும் வாதங்களுக்கும் தொடர்பு இல்லை” என தெரிவித்தனர்.
அப்போது மா. சுப்பிரமணியன் தரப்புக்கு கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ``நீங்கள் மேயராக இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு. அதற்குப் பிறகு நீங்கள் சட்டமன்ற உறுப்பினராக ஆகி விட்டீர்கள். அந்த தருணத்தில் நீங்கள் சபாநாயகரின் கீழ் வருகிறீர்கள். எனவே உங்களை விசாரிக்க சபாநாயகர் அனுமதி வழங்கியது சரியானது தானே?” என கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த மா. சுப்பிரமணியன் தரப்பு, ``குற்றம் நடந்ததாக சொல்லப்படும் காலத்தில் தான் என்ன பதவியில் இருந்தேனோ அந்தப் பதவிக்கு யாரிடம் ஒப்புதல் பெற வேண்டுமோ அவரிடம் தான் பெற முடியும். ஆனால் அதற்கு மாறாக நடைபெற்றுள்ளது” என கூறினார்.
அப்போது மீண்டும் கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ``நீங்கள் உங்கள் பதவியை மாற்றிக் கொண்டே இருப்பீர்கள் அப்படி மாற்றும் பொழுதெல்லாம் சம்பந்தப்பட்டவர்களிடம் சென்று ஒப்புதல் வாங்குவது என்பது நடைமுறை சாத்தியமில்லாதது.
உதாரணமாக ஒருவர் வானியல் ஆய்வாளராக இருக்கிறார். பிறகு அவர் வேறு ஒரு பதவிக்கு சென்று விடுகிறார். அவர் வானியல் ஆய்வாளராக இருந்தபோது செய்த ஒரு குற்றத்திற்காக இஸ்ரோ அமைப்பிடம் சென்று ஒப்புதல் கேட்க முடியுமா என்ன? அப்படித்தான் இதுவும்” என சொன்னதோடு இது தொடர்பான ஏற்கனவே முடிவு காணப்பட்ட வழக்குகள் ஏதேனும் இருக்கிறதா என கேட்டனர்.

அத்தகைய வழக்குகள் சம்பந்தமான விவரங்களை திரட்டி தருவதற்கு சற்று கால அவகாசம் வேண்டும் என மா.சுப்பிரமணியன் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதை அடுத்து வழக்கினை புதன்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
`மேயராக இருந்த ஒருவர் சட்டமன்ற உறுப்பினராக மாறியதற்கு பிறகு ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினால் யாரிடம் விசாரணைக்கான ஒப்புதலை பெற வேண்டும் என்ற முக்கிய அரசியல் சாசன கேள்வி எழுந்திருக்கிறது?’ என விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs