இறந்த தாயின் வெள்ளி கொலுசைக் கேட்டு, தகனத்தை தடுத்து நிறுத்திய மகன்... ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்
ராஜஸ்தானில் ஒரு மகன் வெள்ளி வளையலுக்காக தனது தாயாரின் சிதையில் ஏறி படுத்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை சேர்ந்தவர் புரி தேவி. இவருக்கு 7 மகன்கள் இருக்கின்றனர். இதில் 6 மகன்கள் ஒன்றாக வசிக்கின்றனர். ஓம்பிரகாஷ் என்ற மகன் மட்டும் கிராமத்திற்கு வெளியில் தனியாக வசித்து வந்தார். அவருக்கும் மற்ற சகோதரர்களுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளாக சொத்துப் பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் புரி தேவி உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து போனார். இதையடுத்து தேவியின் உடல் தகனம் செய்வதற்காக மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.

அதற்கு முன்பு தேவியின் கையில் அணிந்திருந்த வெள்ளி வளையலை கழற்றி மூத்த மகன் கிர்தாரி என்பவரிடம் கொடுத்தனர். இதனால் ஓம்பிரகாஷ் அதிர்ச்சியாகி அதனை தன்னிடம் தான் கொடுக்க வேண்டும் என்று கூறி தகராறு செய்தார். அதன் பிறகு உடலை ஓம்பிரகாஷ் மற்றும் சகோதரர்கள் மயானத்திற்கு எடுத்துச் சென்றனர். அங்கு சென்றதும் ஓம்பிரகாஷ் தனது தாயாரின் வெள்ளி வளையலை தன்னிடம் கொடுக்கவேண்டும் என்று மீண்டும் தகராறு செய்தார். இதனால் சகோதரர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென ஓம்பிரகாஷ் தனது தாயாரின் உடலை எரிப்பதற்காக வைத்து இருந்த சிதையில் ஏறி படுத்துக்கொண்டு தனது தாயாரின் உடலுக்கு தீமூட்ட எதிர்ப்பு தெரிவித்தார்.
ஊர் பெரியவர்கள் அவரை எழுந்து வரும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் தன்னை தனது தாயாருடன் சேர்த்து எரித்துவிடும்படி கேட்டுக்கொண்டார். வெள்ளி வளையலை கொடுத்தால் மட்டுமே எழுந்து வருவேன் என்று கூறி அடம்பிடித்தார். தேவியின் உடல் அருகில் வைக்கப்பட்டு இருந்தது. தேவியின் உடலை மற்ற சகோதரர்கள் எடுத்துச்சென்று சிதையில் வைக்க முயன்றனர். ஆனால் ஓம்பிரகாஷ் சிதையில் இருந்து எழும்ப மறுத்தார். இதனால் உடலை தகனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. உடனே பெரியவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க வீட்டில் இருந்து தேவியின் வெள்ளி வளையல் எடுத்து வரப்பட்டு ஓம்பிரகாஷிடம் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு தான் ஓம்பிரகாஷ் சிதையில் இருந்து எழுந்து வந்தார். இரண்டு மணி நேரம் தாமதமாக தேவியின் உடல் எரியூட்டப்பட்டது. மயானத்தில் நடந்த இச்சம்பவ வீடியோ சமூக வலைதளத்தில் பரவி இருக்கிறது.