பாதுகாப்புத் துறைக்கு ரூ.50,000 கோடி கூடுதல் ஒதுக்கீடு: மத்திய அரசு திட்டம்
லெவன் விமர்சனம்: சீரியல் கில்லர் கதையில் சில சறுக்கல்கள்; ஆனாலும் கவனம் ஈர்க்கிறதா இந்த த்ரில்லர்?
சென்னையில் ஒரு மர்மமான நபரால் பலர் ஒரே மாதிரியாக எரித்துக் கொல்லப்படுகின்றனர். அதை விசாரிக்கும் விசாரணை அதிகாரியும் (ஷஷாங்) விபத்தில் சிக்கிக் கொள்ள, அந்தப் பொறுப்பு உதவி ஆணையர் அரவிந்தனுக்கு (நவீன் சந்திரா) வருகிறது. அந்தத் தொடர் கொலைகாரனின் நோக்கம் என்ன, அவனை அரவிந்தன் எப்படி நெருங்குகிறார் என்பதே `லெவன்' படத்தின் கதை.
ஷெர்லாக் ஹோம்ஸ் கதாபாத்திரத்தைப் போல உணர்ச்சியின்றி விசாரிக்கும் பாவனையை தன் ஒற்றை வரிப் பதில்கள், கேள்விகள் மூலம் பிரதிபலிக்க முயன்றிருக்கிறார் நவீன் சந்திரா. அதற்கு நேர்மாறாக, இறுதி பத்து நிமிடங்களில் வேறொரு பரிமாணத்தில் சிறப்பான நடிப்பையும் வழங்கியிருக்கிறார். நாயகி ரியா ஹரிக்கு நாயகனை விரட்டி விரட்டிக் காதலிக்கும் வழக்கமான டெம்ப்ளேட் கதாபாத்திரம். ஆனால், அதில் செயற்கையான உடல்மொழி, வசன உச்சரிப்பு எனச் சோதிக்கிறார். திலீபன், தான் ஏற்ற கதாபாத்திரத்துக்கு என்ன திரை நேரமோ அதற்கு ஏற்ப நடித்திருக்கிறார். பெஞ்சமின், பிரான்சிஸ் என்ற இரட்டையர் கதாபாத்திரத்தில் நடித்த சிறுவர்கள் ஃபிராங்கின், சில்வன் மொத்த பிளாஷ்பேக்குமே எமோஷனலாக க்ளிக்காக உதவியிருக்கின்றனர். பள்ளித் தாளாளராக அபிராமி அனுபவம் பேசும் உணர்வுபூர்வமான கதாபாத்திரத்தைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்.
மழைக் காட்சிகள் படம் நெடுகப் பரவியிருக்கின்றன. அதைச் சோகம், த்ரில்லர் என இருவேறு இடங்களில் லாகவமாகப் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் அசோகன். அதை பிசிரில்லாமல் கோத்த படத்தொகுப்பிலும் பெரிதாகப் பிரச்னை இல்லை. மேலும், திரைக்கதையில் இருக்கும் மர்மங்களை மறைத்து, சண்டைக் காட்சிகளை விறுவிறுப்பாகக் கொண்டு சென்றிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த் என்.பி. டி.இமான் இசையில் பள்ளியில் இரட்டையர்களைக் காட்டும் பாடல் இதம்; அதேபோல நாயகனுக்குப் போடப்பட்டிருக்கும் தீம் இசையும் ஆறுதல்! மற்றபடி, பின்னணி இசை இடைவிடாமல் ஒலித்துக் கொண்டே இருப்பது அயற்சி. அது இறுதிக் காட்சிகளுக்கு மட்டும் தேவையான பரபரப்பை கடத்தியிருக்கிறது. ரெஸ்டாரன்ட்டில் உணவு உண்ணும் போது ஒரு ஃபைலில் ‘Drug Mafia Case’ என்று எழுதி ஒட்டியிருக்கும் ஐடியாவை எல்லாம் ஆர்ட் டைரக்டர் பி.எல்.சுப்பேந்தர் தவிர்த்திருக்கலாம். சினிமா படத்தின் புரமோஷன் பேனர்கள் போலப் பத்திரிகையாளர் சந்திப்பில் போலீஸுக்கு பேனர் வைத்ததும் பயங்கரம் பாஸ்!
“என்னுடைய இத்தனை வருஷ சர்வீஸ்ல இப்படி ஒரு கொலைகாரனைப் பார்த்ததே இல்லை” என்ற இத்தியாதி சீரியல் கில்லர் வசனத்தை ஆடுகளம் நரேன் பேசுவதற்கு ஏற்ப திரைமொழி செயற்கையாகப் பின்னப்பட்டிருக்கிறது. முதல் பாதி ஸ்டேஜிங் பல இடங்களில் தடுமாற்றமாகவே இருப்பதால், கதைக்குள் ஒன்றிப் பயணிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதை மேலும் குழிக்குள் இறக்கும் முயற்சியாகக் காதல் காட்சிகள் சோதிக்கின்றன. சஸ்பென்ஸ் ஏற்றி வைக்கப்பட்ட சில இடங்கள் வேலை செய்து இரண்டாம் பாதியை வரவேற்கின்றன. இருப்பினும் இன்னும் கத்திரி போட்டிருக்க வேண்டிய இடங்கள் ஏராளம்!
பிளாஷ்பேக்கிற்குச் சென்ற பிறகு ஸ்டேஜிங், மேக்கிங் அனைத்தும் புதிய உணர்வு அடைந்த விதமாக மாறத் தொடங்குகின்றன. குறிப்பாக, எங்குப் பார்த்தாலும் இரட்டையர்கள் இருக்கும் அந்தப் பள்ளி, காட்சிப்படுத்தப்பட்ட விதம் அட்டகாசம். இருப்பினும், Bully கலாச்சாரத்தை இன்னும் நுட்பமாகக் காட்சிப்படுத்தியிருக்கலாம்; அது இன்னும் உணர்வுபூர்வமாக கதாபாத்திரத்தை மனதில் நிறுத்தியிருக்கும். பிளாஷ்பேக்கை முடிந்து நிகழ்காலத்திற்குத் திரைக்கதை வர, வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறது. ஒரு திரில்லர் கதையில் சில லாஜிக் தவறுகள் இருக்கலாம், ஆனால் இத்தனையா?! அந்தக் கடைசி இரண்டு ட்விஸ்ட்கள் எதிர்பாராதவை என்றாலும், அநியாயம் பாஸ்! செஸ் குறித்த வசனம் கவனிக்க வைத்தாலும், “ஐ.ஏ.எஸ். கிடைத்து ஐ.பி.எஸ். வாங்கினேன்” என்று சொல்லும் வசனம் எல்லாம் சீரியஸான நேரத்தில் போடப்பட்ட காமெடி!
மொத்தத்தில், பிளாஷ்பேக் மூலம் ரசிக்க வைக்கும் இந்த `லெவன்', திரில்லர், சீரியல் கில்லர் மோடில் சொதப்பி, சராசரி லெவனாக முடிகிறது.