சுவென் லைஃப் நிறுவனத்தின் 4-வது காலாண்டு நிகர இழப்பு அதிகரிப்பு!
DD Next Level: சர்ச்சையான கோவிந்தா பாடல்; கண்டித்த உயர்நீதிமன்றம் - தயாரிப்பு நிறுவனம் சொன்னதென்ன?
நடிகர் சந்தானம் நடித்துள்ள 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் (DD Next Level)' திரைப்படம் நாளை (மே 16) திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது. இவ்வாறிருக்க, இப்படத்தில் இடம்பெற்றுள்ள, 'கோவிந்தா... கோவிந்தா...' பாடலுக்கெதிராக ஒருதரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது.
இப்பாடல், வெங்கடேஸ்வராவை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ஜி.டி.பாலாஜி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தார்.

தனது மனுவில், பக்தி பாடலின் வரிகளை மாற்றி, படத்துக்கு சம்பந்தமில்லாமல் வெங்கடேஸ்வரரை அவமதிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் குற்றம் சாட்டினார்.
அதோடு, மதத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ள இந்த பாடலை நீக்கும்படி கூறாமல், "திரைப்படத்துக்கு தணிக்கை குழு, யு/ஏ சான்று வழங்கப்பட்டுள்ளதால், சென்சார் சான்றை நிறுத்தி வைக்க வேண்டும்.
இந்த பாடலுடன் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். பாடலை நீக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரிக்கை விடுத்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பிலிருந்து, "குறிப்பிட்ட பாடலில் ஆட்சேபம் தெரிவித்த வரிகள் நீக்கப்பட்டு, பாடல் மாற்றியமைக்கப்பட்டு, புதிய சென்சார் சான்று பெறப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.
"இருப்பினும் பாடலின் டியூன் பயன்படுத்தப்படுகிறது" என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, "இதுபோல டியூனை பயன்படுத்த வேண்டும் என ஏன் தோன்றியது? மற்ற மதங்களைப் பற்றி இதுபோல பாடல் பயன்படுத்த தைரியம் உள்ளதா? எந்த மதங்களுக்கும் அவதூறு ஏற்படுத்த அனுமதிக்க முடியாது" எனத் தெரிவித்த நீதிபதிகள், டியூனை மியூட் செய்வது குறித்து விளக்கம் பெற்றுத் தெரிவிக்க படத் தயாரிப்பு நிறுவனம் தரப்புக்கு அறிவுறுத்தினர்.
அதன்படி விளக்கம் பெற்ற படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பு வழக்கறிஞர், பாடல் டியூன் மியூட் செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், நாளை விரிவான உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறி, விசாரணையை தள்ளிவைத்தனர்.