`கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவிற்கு மணி மண்டபம் கட்ட விடாமல் தடுக்கிறது திமுக அரசு!' - சசிகலா ஆவேசம்
மறைந்த முன்னாள் முதல்வரின் தோழியும் கொடநாடு ஸ்டேட் பங்குதாரர்களில் ஒருவருமான சசிகலா மூன்று நாள் பயணமாக நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகில் உள்ள கொடநாடு எஸ்டேட்டிற்கு இன்று மாலை வருகைத் தந்துள்ளார். எஸ்டேட் நிர்வாகத்தினர் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் நீண்ட வரிசையில் நின்று எஸ்டேட் நுழைவு வாயில் பகுதியில் வரவேற்றனர்.

செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சசிகலா, " மக்களுக்கான ஆட்சியை வழங்கிக் கொண்டிருந்த அம்மா ஜெயலலிதாவிற்கு கொடநாட்டில் மணி மண்டபம் கட்ட வேண்டும் என்பது ஒட்டுமொத்த மக்களின் விருப்பமாக இருக்கிறது. அதன் காரணமாகவே கடந்த 2024 ம் ஆண்டு ஜனவரி மாதம் பூமி பூஜை செய்தோம். மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி கோரினோம்.
ஆனால், ஏதேதோ காரணங்களைச் சொல்லி ஜெயலலிதா அவர்களின் உருவச்சிலை மற்றும் மணி மண்டபம் கட்டுவதற்கு தி.மு.க அரசு தடை விதித்து வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு சொந்தமான கொடநாடு ஸ்டேட்டில் மணிமண்டபம் கட்டுவதற்கு இந்த தி.மு.க அரசு தொடர்ந்து பல்வேறு தடைகளை விதித்து வருகிறது.

தனியாருக்கு சொந்தமான இடங்களில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப இது போன்ற மணிமண்டபங்களை அமைத்து வழிபாடு செய்து கொள்ளலாம். ஆனால், எங்களுடைய கோரிக்கை மனுவை மாவட்ட நிர்வாகம் நிராகரிப்பு செய்து அனுப்பி இருக்கிறது. ஆனால், அனைத்து தடைகளையும் மீறி நிச்சயமாக இங்கு அம்மாவுக்கான மணி மண்டபத்தை எழுப்புவோம். 2026- ல் நிச்சயம் அம்மாவின் ஆட்சியை மக்கள் மீண்டும் கொண்டு வருவார்கள். அதற்கான அனைத்து முயற்சிகளையும் நான் முன்னெடுப்பேன்" என்றார்.