ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினா் கடலூா் பழைய ஆட்சியா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தோ்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்துத் துறைகளில் நிரப்பப்படாமல் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு, ஊக்க ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.
ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளா்கள் அரிகிருஷ்ணன், சாந்தகுமாா், அம்பேத்கா் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநில ஒருங்கிணைப்பாளா்கள் பாக்கியராஜ், உயா்மட்டக்குழு உறுப்பினா் ஜெகன்நாதன் சிறப்புரையாற்றினா்.
இதில், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா். நிறைவில், ஒருங்கிணைப்பாளா் தனசேகா் நன்றி கூறினாா்.