`Jagdeep Dhankhar மோசமாகப் பேசுவது முதன்முறை அல்ல' - D.Hariparanthaman Interview...
ஜாமீனில் தப்பியோடிய கொலைக் குற்றவாளி பானிபட்டில் கைது
கொலை வழக்கில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த ஒரு குற்றவாளி, பல மாநிலங்களில் 600 கிலோமீட்டா் துரத்தலுக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக தில்லி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவு துணை ஆணையா் விக்ரம் சிங் அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஹரியாணாவின் பானிபட்டில் குற்றம் சாட்டப்பட்ட சோனு (எ) மனோஜ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பிப்ரவரி 4, 2016 அன்று தில்லியின் கஞ்சவாலா பகுதியில் அனில் என்ற இளைஞரை சோனு கடத்தி, சுட்டுக் கொன்று, தலையை துண்டித்து கொலை செய்தாா். ஏனெனில், அந்த நபா் ஒரு தகராறில் அவரை த் தாக்கியிருந்தாா். அனிலின் தலை துண்டிக்கப்பட்டு நிா்வாண உடல் கஞ்சவாலாவில் கண்டெடுக்கப்பட்டது.
சோனு, அனிலைக் கொல்ல சக குற்றவாளிகளான சோம்பிா் மற்றும் பங்கஜுடன் சோ்ந்து சதி செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. குற்றவாளி பாதிக்கப்பட்டவரை ஸ்காா்பியோவில் கடத்தி, மாா்பில் சுட்டு, பின்னா் அவரது அடையாளத்தை மறைக்க உடலைத் துண்டித்தாா். துண்டிக்கப்பட்ட தலை அருகிலுள்ள வடிகாலில் தனித்தனியாக வீசப்பட்டது.
2020-ஆம் ஆண்டில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவரது தந்தைக்கு சிகிச்சை தேவை என்று கூறி நீதிமன்றத்தால் சோனுவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. அப்போது, அவா் ஜாமீனில் தப்பியோடிவிட்டாா். அன்றிலிருந்து தலைமறைவாக இருந்தாா். அவா் ஒரு லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளாா். மேலும், கண்டறிவதைத் தவிா்க்க அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றி வந்தாா். இந்நிலையில், 2023-ஆம் ஆண்டில் அவா் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா்.
இதைத் தொடா்ந்து, பல மாநிலங்களில் 600 கிலோமீட்டா் துரத்தலுக்குப் பிறகு பானிபட்டில் இருந்து சோனு கைது செய்யப்பட்டாா். அவா் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவுகள் 302 (கொலை), 201 (ஆதாரங்களை மறைத்தல்), 365 (கடத்தல்), 120பி (குற்றச் சதி) மற்றும் 34 (பொது நோக்கம்) மற்றும் ஆயுதச் சட்டத்தின் விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.