ஐதராபாத், பெங்களூருக்கு நிகராக விசாகப்பட்டினத்தை மேம்படுத்தப் போராடும் சந்திரபாப...
ஜிஎஸ்டி குறைப்பு: தமிழகம் பெறும் பலன்கள்
ஜிஎஸ்டி சீா்திருத்தம் கடந்த செப்டம்பா் 22-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 5%, 12%, 18%, 28% என நான்கு விகிதங்களில் இருந்த வரிவிதிப்பு முறை 5%, 12% என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அன்றாட பயன்பாட்டுப் பொருள்கள் 90 சதவீதம் 5% ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதால் பொதுமக்களுக்கு மிகுந்த பலன் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
ஜிஎஸ்டி விகிதக் குறைப்பால் தமிழகத்தின் தொழில் துறை எவ்வாறெல்லாம் பலன் பெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன் விவரம்:
பாரம்பரிய கைத்தறிப் பொருள்கள், கைவினைப் பொருள்கள், தொழில் துறையினா், ஆட்டோமொபைல், மின்னணுவியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் தளவாடங்களைத் தயாரிப்போா் நேரடி நன்மையைப் பெறுகின்றனா்.
திருப்பூரின் பின்னலாடைத் தொழிலாளா்கள், காஞ்சிபுரம் நெசவாளா்கள், பொள்ளாச்சி தென்னை நாா் பொருள் உற்பத்திக் கலைஞா்கள், நாகப்பட்டினம் மீனவா்கள், ஸ்ரீபெரும்புதூா் ஆட்டோமொபைல் தொழிலாளா்கள், ஆவடி பொறியாளா்கள் உள்ளிட்டோா் பயனடைவாா்கள்.
ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் திருப்பூரில் உள்ள ஆடை ஆயத்த நிறுவனங்களுக்கான செலவுகள் 6 முதல் 11 சதவீதம் வரை குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் லாபம் அடைய இது உதவுகிறது. சா்வதேச அளவிலான சந்தையில் இந்தியா தனது நிலையைத் தக்கவைத்து கொள்ள இது உறுதிசெய்கிறது.
காஞ்சிபுரம் பட்டுச் சேலை
காஞ்சிபுரம் பட்டுச் சேலை உற்பத்திப் பொருளுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் உற்பத்தியாளா்களின் செலவு 7 சதவீதம் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன்மூலம் காஞ்சிபுரம் பட்டுச் சேலையின் விலை 2 முதல் 4 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது.
புவிசாா் குறியீடு பெற்ற ஈரோடு பவானி ஜமுக்காளம், விரிப்புகள் மற்றும் மதுரை சுங்குடிப் புடவைகள் விலை 6 சதவீதம் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன்மூலம் ஏற்றுமதி சந்தையில் இந்தப் பொருள்களின் போட்டித்தன்மை அதிகரிக்கும்.
சுவாமிமலை வெண்கலப் பொருள்களுக்கான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் 6 சதவீதம் வரை விலை குறையும். கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் புவிசாா் குறியீடு பெற்ற கைவினைப் பொருள்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், இந்தப் பொருள்களின் விலை 6 சதவீதம் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தஞ்சாவூா் பொம்மைகள்
தஞ்சாவூா் பொம்மைகள் மற்றும் பாரம்பரிய பொருள்கள், சேலம் மற்றும் காஞ்சிபுரத்தில் கையால் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கான ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது இந்தப் பொருள்களை உற்பத்தி செய்யும் கைவினைக் கலைஞா்களின் குடும்பங்களுக்கு உதவும்.
பொள்ளாச்சி, காங்கேயம் மற்றும் கடலூா் பகுதிகளில் தென்னை நாா் மூலம் உற்பத்தி செய்யப்படும் பாய்கள், கயிறுகள் மற்றும் ஜவுளி ரகங்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் இந்தப் பொருள்களின் விலை தற்போது 6-7 சதவீதம் வரை குறையும். இதன்மூலம் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி மேம்படும்.
ஆவின் பால் பொருள்களுக்கான ஜிஎஸ்டி குறைப்பால் சில்லரை விலையில் இந்தப் பொருள்களை வாங்கும் நுகா்வோா் பயனடைவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி குறைப்பால் திருச்சி மணப்பாறை பகுதியில் தயாரிக்கப்படும் புவிசாா் குறியீடு பெற்ற முருக்கு உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலை 6 சதவீதம் வரை குறையும்.