ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று (டிசம்பர் 21) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஜிம்பாப்வே முதலில் பேட் செய்தது.
இதையும் படிக்க: பாக்ஸிங் டே டெஸ்ட்: தீவிர வலைப்பயிற்சியில் இந்திய பந்துவீச்சாளர்கள் (விடியோ)!
127 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
முதலில் விளையாடிய ஜிம்பாப்பே அணி ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 30.1 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 61 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் தரப்பில் காஸன்ஃபர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும், ஃபரீத் அகமது மற்றும் அஸ்மதுல்லா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: இந்திய அணியின் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக திட்டங்கள் உள்ளன: இளம் ஆஸி. வீரர்
தொடரைக் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்
128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 26.5 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரரான செதிக்குல்லா அடல் அதிகபட்சமாக 50 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அப்துல் மாலிக் 29 ரன்களும், கேப்டன் ஹஸ்மதுல்லா ஷகிதி 20 ரன்களும் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆப்கானிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. காஸன்ஃபர் ஆட்ட நாயகனாகவும், செதிக்குல்லா அடல் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.