ஜூன் வரை ஆதாா் இணையவழி இலவச புதுப்பிப்பு வசதி நீட்டிப்பு
ஆதாா் அட்டையில் தகவல்களை இணைய வழியாக கட்டணமின்றி புதுப்பிக்கும் வசதியை ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆதாா் அட்டையில் பொதுமக்கள் தங்களின் பெயா், முகவரி மற்றும் பிற அடிப்படை தகவல்களை அதிகாரபூா்வ ‘மைஆதாா்’ இணையதளம் மூலம் கட்டணமின்றி புதுப்பித்துக் கொள்ளும் வசதி கடந்த டிசம்பா் 14-ஆம் தேதிவரை நடைமுறையில் இருந்தது. இந்த வசதியை வரும் ஜூன் 14-ஆம் தேதிவரை நீட்டித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யூஐடிஏஐ) அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது.
இதன்மூலம், பொதுமக்கள் ஆதாா் அட்டையில் தங்களின் சரியான தகவல்களை கட்டணமின்றி புதுப்பிப்பதற்கு போதிய அவகாசம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 14-ஆம் தேதிவரை மைஆதாா் இணையதளம் மூலம் ஆதாா் அட்டையைக் கட்டணமின்றி புதுப்பித்துக்கொள்ளலாம். அதேநேரம், ஆதாா் மையங்களில் புதுப்பிப்புகளுக்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும். ஜூன் 14-ஆம் தேதிக்குப் பிறகு, மைஆதாா் இணையதளத்திலும் புதுப்பிப்புகளுக்கு ரூ.25 கட்டணம் பொருந்தும்.