ஜெயச்சந்திரன் : `16,000 பாடல்கள்; கேரள அரசின் 5 விருதுகள்’ - காலத்தால் அழியாத குரலுக்கு சொந்தக்காரர்
பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் திருச்சூர் பூங்குந்நத்து வீட்டில் வசித்துவந்தார். ஏற்கனவே அவருக்கு கல்லீரல் சம்பந்தமான பிரச்னையால் உடல்நலக்குறைவு இருந்து வந்ததால் கடந்த ஓராண்டாக சிகிச்சை எடுத்து வந்துள்ளார். அவ்வப்போது மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சையும் பெற்றுவந்தார். இந்த நிலையில் நேற்று மாலை அவர் பூங்குந்நத்து வீட்டில் திடீரென மயங்கிவிழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அவர் நேற்று இரவு மரணமடைந்தார். அவரது உடல் இன்று காலை 9 மணி முதல் பொது அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அவரது இறுதிச்சடங்குகள் நாளை நடைபெறுகின்றன. பாடகர் ஜெயச்சந்திரன் 1944-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ம் தேதி எர்ணாகுளம் ரவிபுரத்தில் பிறந்தார். பள்ளி செல்லும் காலத்தில் இரிஞ்ஞாலக்குடா-வில் வசித்துவந்தார்.
சென்னையில் ஒரு இசை நிகழ்ச்சியில் பாடிய ஜெயச்சந்திரனுன் வசீகர குரலில் ஈர்க்கப்பட்ட சினிமா இயக்குநர் வின்செண்ட் சிபாரிசின் அடிபடையில் இசையமைப்பாளர் ஜி.தேவராஜனின் வழிகாட்டுதலில் சினிமாவில் பாடத்தொடங்கினார். மலையாளத்தில் அதிக பாடல்களை பாடியிருந்தாலும், தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் பாடல்களை பாடியுள்ளார். பாடகர் ஜேசுதாஸின் நெருங்கிய நண்பராகவும் விளங்கி வந்தார்.
பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் பாடிய 'ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு காற்றாடி போல் ஆடுது...' என்ற தமிழ் பாடல் மிகவும் பிரபலமானது.
சுமார் 60 ஆண்டுகளாக சுமார் 16,000 பாடல்களை பாடியுள்ளார். தேசிய விருது, சிறந்த பின்னணி பாடகருக்கான கேரள மாநில விருதை 5 முறை பெற்றுள்ளார். தமிழ்நாடு அரசின் சிறந்த பின்னணி பாடகருக்கான விருதும் ஜெயச்சந்திரனுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பாடகர் ஜெயச்சந்திரன் மறைவுக்கு சினிமா பிரபலங்களும், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...