"LIC இணையதளம் இந்தி திணிப்பிற்கான கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது"- முதல்வர் ஸ்ட...
ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கு: நீதிமன்றம் குறிப்பிட்ட `சமரச மையம்’ என்றால் என்ன?
நடிகர் ஜெயம் ரவி அவரின் மனைவி ஆர்த்தி இருவரும் பிரிந்து வாழ்வது அனைவரும் அறிந்ததே. முதலில் ஜெயம் ரவி தாங்கள் பிரிந்து வாழ்வதாக அறிவிக்க, 'அது என்னுடன் பேசி எடுக்கப்பட்ட முடிவல்ல. என்னால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை' என்று அறிக்கை வெளியிட்டார் ஆர்த்தி. இதையடுத்து, இவர்களுடைய குடும்ப பிரச்னை சமூக வலைதளங்களில் பரபரப்பான பேசுபொருளானது.
இந்த நிலையில் ஜெயம் ரவி குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்துக்கேட்டு மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு சில தினங்களுக்கு முன்னால் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு ஜெயம் ரவி நேரிலும் ஆர்த்தி காணொளி மூலமும் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவரையும் 'சமரச தீர்வு மைய'த்தில் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியுள்ளது. அது என்ன சமரச தீர்வு மையம், அந்த மையத்தில் யார், யாரெல்லாம் இருப்பார்கள், சமரச தீர்வு மையத்தின் பணிகள் என்னென்ன, தம்பதியரை சேர்த்து வைத்து விடுவார்களா, சமரச தீர்வு மையம் எடுத்துச்சொல்லியும், ஒருவர் சேர்ந்து வாழ விருப்பப்பட்டு, இன்னொருவர் சேர்ந்து வாழ விரும்பவில்லையென்றால் என்ன நடக்கும் என்பன உள்ளிட்ட சில கேள்விகளை வழக்கறிஞர் சாந்தகுமாரியிடம் கேட்டோம். விரிவாக விளக்கினார்.
''ஒரு பிரச்னைக்கு இரண்டு வகையான தீர்வு உண்டு. ஒன்று, சட்டரீதியாக வழக்காடி தீர்ப்புப் பெறுவது.
இன்னொன்று, பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பது. 'சமரச' பேச்சுவார்த்தை மூலம் சம்பந்தப்பட்டவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண உதவும் அமைப்பின் பெயர் 'சமரச மையம்.'
ஒரு வழக்கின் இருதரப்பினரும் சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்பினால், அவர்களை நீதிமன்றம் சமரச மையத்திற்கு அனுப்பி வைக்கும். அல்லது நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் வழக்குகளில், தீர்வு காண வேண்டி நீதிமன்றமே இருதரப்பினரையும் சமரச மையத்திற்கு அனுப்பி வைக்கும்.
இந்த மையத்தில், சமரசம் பேசுவதன் மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் சிறப்புப் பயிற்சியில் தேர்ந்த வழக்கறிஞர்கள், பல்வேறு துறைகளில் சிறப்பு தகுதிப்பெற்ற சமரச நிபுணர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு வழக்கிற்கும் சமரசம் பேசுவதில் தேர்ச்சிப்பெற்ற ஒருவர் அல்லது இருவர், இரண்டு தரப்பினரிடையே சமரச முயற்சிகளை செய்வார்கள். தேவைப்பட்டால், ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் வழக்கறிஞர்களையும் இந்த சமரச முயற்சிக்கு உதவ அழைப்பார்கள்.
இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இருதரப்பினரும் சமரச மையத்திற்கு செல்வதற்கு சம்மதம் சொன்னாலே ஒழிய, எந்த வழக்கையும் சமரச மையத்திற்கு அனுப்ப இயலாது. ரவி-ஆர்த்தியும் விஷயத்திலும் இதே நடைமுறைதான் கடைபிடிக்கப்பட்டிருக்கும். ஏனென்றால், இந்த மையத்துக்கு செல்வதற்கு யாரும், யாரையும் நிர்பந்திக்க முடியாது.
ரவி - ஆர்த்திக்கு இடையே சமரசத்திற்கு வாய்ப்பு இருக்கும்பட்சத்தில் அதற்கு சமரசர்கள் உதவி செய்வார்கள். ஒருவேளை வழக்காடிகள், அதாவது ரவியும் ஆர்த்தியும் மனமுவந்து சமரசமாக தீர்வுகாண முடிவு செய்தால், அதனை 'சமரச ஒப்பந்த'மாக்கி அதை உரிய நீதிமன்றத்திற்கு அனுப்பி வைப்பார்கள். அதையே நீதிபதி தீர்ப்பாகக் கூறுவார். ஒருவேளை சமரச முயற்சி தோல்வியடையும்பட்சத்தில், தோல்வி அறிக்கையை நீதிமன்றத்துக்கு அனுப்பி வைப்பார்கள். இதையடுத்து நிலுவையிலுள்ள அவர்களுடைய வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
ஜெயம் ரவி - ஆர்த்தி வழக்கில் நிரந்தர ஜீவனாம்சம் குறித்து தீர்வு காண முடிந்தால் வழக்கு விரைவில் முடியும். ஒருவேளை ஆர்த்தி விவாகரத்துக்கு எதிராக முடிவு எடுத்தால், வழக்கு விசாரணை நடைபெறும். குடும்பநல வழக்குகளில் கணவனும் மனைவியும் இனி ஒன்றாக வாழ முடியாது எனக் கருதும்பட்சத்தில், நிரந்தர ஜீவனாம்சம், வாழ்நாள் பாதுகாப்பு, குழந்தைகளுக்கு யார் கார்டியனாக இருப்பது, அவர்களுக்கான ஜீவனாம்சம் போன்ற அடுத்தக்கட்ட தீர்வுகளைக் காணலாம். மற்றபடி, சட்டத்துக்குப் புறம்பான எந்தவொரு தீர்வையும், சமரசத்தையும் இந்த சமரச மையத்தால் எடுக்க முடியாது'' என்கிறார் வழக்கறிஞர் சாந்தகுமாரி.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...