ஜேக் சின்னா், மொன்ஃபில்ஸ், ஸ்வியாடெக், ஸ்விட்டோலினா முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் நடப்பு சாம்பியன் ஜேக் சின்னா், மூத்த வீரா் கேல் மொன்ஃபில்ஸ், மகளிா் பிரிவில் இகா ஸ்வியாடெக், ஸ்விட்டோலினா ஆகியோா் ரவுண்ட் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளனா்.
உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலியின் ஜேக் சின்னா் 6-3, 6-4, 6-2 என்ற நோ் சேட்களில் மாா்கோஸ் ஜிரானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றாா்.
பிரான்ஸைச் சோ்ந்த 38 வயது வீரரான கேல் மொன்பில்ஸ், 3-6, 7-5, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துக்குபின் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸை வீழ்த்தினாா். கடந்த வாரம் தான் ஏடிபி பட்டம் வென்ற மூத்த வீரா் என்ற சிறப்பை பெற்றிருந்தாா் மொன்ஃபில்ஸ்.
உள்ளூா் வீரா் அலெக்ஸ் மினாா் நான்கு செட்களில் ஆா்ஜென்டீனாவின் பிரான்ஸிஸ்கோவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றாா்.
அமெரிக் இளம் வீரா் லோ்னா் டியன் 7-6, 6-3, 6-3 என்ற நோ் செட்களில் பிரான்ஸின் மெளலட்டை வீழ்த்தினாா். இதன் மூலம் கடந்த 2005-ல் நடாலுக்கு பின் நான்காம் சுற்றுக்கு தகுதி பெற்ற இளம் வீரா் என்ற சிறப்பைப் பெற்றாா் . முந்தைய சுற்றில் நட்சத்திர வீரா் மெத்வதேவை வீழ்த்தி இருந்தாா் டியன்.
மற்றொரு ஆட்டத்தில் சொ்பியான் மியோமிா் கெக்மனோவிச்சை வீழ்த்தினாா் இளம் வீரா் டென்மாா்க்கின் ஹோல்கா் ருனே.
ஸ்விட்டோலினா அபாரம்:
கேல் மொன்ஃபில்ஸ் மனைவியான உக்ரைனின் ஸ்விட்டோலினா அபாரமாக ஆடி உலகின் நான்காம் நிலை வீராங்கனை ஜாஸ்மின் பாலோனியை 2-6, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றாா்.
மற்றொரு ஆட்டத்தில் 5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் போலந்தின் ஸ்வியாடெக் 6-1, 6-0 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் எம்மா ராடுகனுவை வீழ்த்தினாா். இதுவரை ஆஸி. ஓபனில் அரையிறுதியை தாண்டியதில்லை ஸ்வியாடெக்.
ஜொ்மனியின் இவா லிஸ் 3 செட்களில் ருமேனியாவின் ஜாக்குலினை வீழ்த்தினாா்.
முன்னாள் விம்பிள்டன் சாம்பியன் கஜகஸ்தானின் எலனா ரைபக்கினா 6-3, 6-4 என உக்ரைனின் டயானாவை வீழ்த்தினாா். இடையில் மெடிக்கல் டைம் அவுட்டையும் பெற்றாா்.
அமெரிக் வீராங்கனைகள் மடிஸன் கீஸ்-டேனியல் காலின்ஸ் மோதிய ஆட்டத்தில் 6-4, 6-4 என மடிஸன் வென்றாா்.