ஜோ பைடனைப் போல பிரதமர் மோடி நினைவை இழந்து வருகிறார்: ராகுல் காந்தி
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனைப் போல பிரதமர் நரேந்திர மோடி நினைவை இழந்து வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற நவம்பர் 20 அன்று நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமராவதி நகரில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, ”மாநில அரசுகளின் வேட்பாளர்களை காசு கொடுத்து வாங்கி அரசைக் கவிழ்ப்பதற்கும், பெரும் தொழிலதிபர்களின் 16 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்வதற்கும் மத்திய அரசுக்கு உரிமை இருப்பதாக அரசியல் சட்டத்தின் எந்த இடத்திலும் எழுதப்படவில்லை.
அரசியலமைப்பை நாட்டின் மரபணுவாக காங்கிரஸ் கருதுகிறது. ஆனால், ஆளும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அது வெற்றுப் புத்தகம் மட்டுமே.
சமீப காலங்களில் நான் எழுப்பும் அதே பிரச்சினையைப் பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார் என்று என் சகோதரி என்னிடம் கூறினார். மக்களவையில் அவரிடம், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, இடஒதுக்கீடு மீதான 50 சதவீத உச்சவரம்பை நீக்க வேண்டும் என்று கூறினேன். இப்போது அவர் தனது தேர்தல் கூட்டங்களில் நான் இடஒதுக்கீட்டுக்கு எதிரானவன் என்று கூறுகிறார். முன்னாள் அமெரிக்க அதிபரைப் போல பிரதமர் மோடி நினைவை இழந்து வருகிறார். அடுத்து, ராகுல் காந்தி சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரானவன் என்றும் அவர் கூறுவார்” என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க| மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: கடத்தப்பட்ட 6 பேரும் சடலங்களாக மீட்பு!
மேலும் பேசிய அவர், “ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பு நீக்கம் ஆகியவை விவசாயிகளையும் சிறு வணிகர்களையும் கொல்லும் ஆயுதங்கள். நாட்டில் வேலையின்மை அதிகரித்து வருகிறது, அதனால்தான் சமூகத்தில் வெறுப்பு பரவுகிறது. மோடி அரசு இருக்கும்வரை புதிய வேலை வாய்ப்புகள் உருவாகாது.
நம் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் கட்டுப்பாட்டை மீறுகிறது. ஏழைகள் தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைக்க முடியாது. அதே நேரத்தில் தொழிலதிபர்களின் வீட்டுத் திருமணங்களில் கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது.
தொழிலதிபர்கள் உங்களை பிரதமராக தேர்வு செய்யவில்லை, இந்திய மக்களே உங்களைத் தேர்ந்தெடுத்தனர் என்று மோடியிடம் நான் சொல்ல விரும்புகிறேன். தொழிலதிபர்கள் அவரை சந்தைப்படுத்தினார்கள் என்பதே உண்மை” என்றார்.
இதையும் படிக்க| குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசனை வீழ்த்திய இளைஞர்!
மும்பையில் தாராவி மறுசீரமைப்பு திட்டம் குறித்து பேசிய ராகுல் காந்தி, “தாராவியில் பத்து பணக்காரர்கள் மட்டும் வாழ்ந்திருந்தால் அங்குள்ள நிலம் கையகப்படுத்தப்பட்டிருக்காது. பணக்காரர்களின் நிலம் பறிக்கப்பட்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நிலத்தை மட்டும் ஏன் கையகப்படுத்த வேண்டும்? அவை அரசியல் சட்டத்தில் எழுதப்பட்டுள்ளதா?" என்று கேள்வி எழுப்பினார்.