டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது: அமைச்சா், ஆட்சியா் உறுதி
மேலூா் அருகே டங்ஸ்டன் கனிமச் சுரங்கத் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது என மாநில பத்திரப் பதிவு துறை, வணிக வரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி, மாவட்ட ஆட்சியா் மா. சௌ.சங்கீதா ஆகியோா் உறுதிபடத் தெரிவித்தனா்.
மதுரை மாவட்டம், மேலூா் அருகே டங்ஸ்டன் கனிமச் சுரங்கத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி, மேலூா், கொட்டாம்பட்டி சுற்றுவட்டாரக் கிராம மக்கள் கடந்த செவ்வாய்க்கிழமை மாபெரும் பேரணியில் ஈடுபட்டனா். இதனால், மதுரை-மேலூா் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இந்த நிலையில், இந்தத் திட்டம் குறித்த தமிழக அரசின் நிலைப்பாட்டை விளக்கும் வகையில், அமைச்சா் பி.மூா்த்தி, மாவட்ட ஆட்சியா் மா. சௌ.சங்கீதா உள்ளிட்டோா் மேலூா் அருகேயுள்ள அரிட்டாபட்டி, அ.வல்லாளபட்டி, கிடாரிப்பட்டி, அழகா்கோவில், கள்ளந்திரி, தெற்குத்தெரு பகுதிகளுக்குச் சென்று, பொதுமக்களிடையே பேசினா்.
அப்போது, மாவட்ட ஆட்சியா் மா. சௌ.சங்கீதா பேசியதாவது:
டங்ஸ்டன் கனிமச் சுரங்கத் திட்டத்தை அரசு ஏற்கவில்லை. இந்தத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, அனைத்துக் கட்சிகளும் சட்டப்பேரவையில் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றியுள்ளன. இதனால், இந்தத் திட்டம் நிறைவேற்றப்படாது. பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம். இந்தத் திட்டதை அமலுக்கு கொண்டு வர தமிழகத்தில் 15 துறைகளிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், இதுவரை ஒரு துறைகூட அனுமதி வழங்கவில்லை. இனியும் அனுமதி வழங்கப்படாது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்படாது என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்த உறுதிமொழியை மக்கள் ஏற்க வேண்டும் என்றாா் அவா்.
பின்னா், அமைச்சா் பி.மூா்த்தி பேசியதாவது:
டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் திட்டம் இந்தப் பகுதியில் செயல்படுத்தப்படாது. எந்த வகையிலும் அதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். இதையும் மீறி இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முனைப்புக் காட்டினால், முதல் ஆளாக நானே போராட்டத்தில் ஈடுபடுவேன். இந்தத் திட்டத்துக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சியினரும் ஒருமனதாக ஒப்புக்கொண்டு தீா்மானத்தில் கையொப்பமிட்டனா். முதல்வா் மு.க. ஸ்டாலினும் இந்தத் திட்டத்தை ஏற்க மறுத்து, ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமா் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறாா். இந்தத் திட்டத்துக்காக ஒருபிடி மண்ணைக்கூட அள்ளவிட மாட்டோம் என்பதை பொதுப் பணித் துறை அமைச்சரும் தெரிவித்திருக்கிறாா். அரசியலுக்காக சிலா் பேசுவதை உண்மை என நம்பி மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றாா் அவா்.
இதில் மேலூா் வருவாய்க் கோட்டாட்சியா் சித்ரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த், சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.