டங்ஸ்டன் சுரங்கம்: நாளை(ஜன. 23) மகிழ்ச்சியான தகவல் வரும்! - அண்ணாமலை
மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக நாளை(வியாழக்கிழமை) மகிழ்ச்சியான தகவல் வரும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், மேலூா் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் தோண்ட கடந்த ஆண்டு நவம்பா் மாதத் தொடக்கத்தில் ஏலத்தின் மூலம் மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில் சுரங்கம் தோண்டும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, அரிட்டாபட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்கள், அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அரிட்டாபட்டி போராட்டக்குழுவினர் இன்று(புதன்கிழமை) மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை தில்லியில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். மத்திய இணையமைச்சர் எல். முருகன், சுதாகர் ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிக்க | மத்திய அமைச்சருடன் அரிட்டாபட்டி போராட்டக்குழுவினர் சந்திப்பு!
மத்திய அமைச்சரைச் சந்தித்தபின் செய்தியாளர்களுடன் பேசிய அண்ணாமலை,
அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக நாளை(வியாழக்கிழமை) மகிழ்ச்சியான தகவல் வரும். மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்கும்.
அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் வராது என்ற உறுதிமொழியை பாஜக நிறைவேற்றும்.
தமிழ்நாட்டில் அரிட்டாபட்டி பகுதியில் மட்டுமே டங்ஸ்டன் உள்ளதாக தொல்லியல் துறை கூறியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் எங்குமே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படாது.
மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். போராட்டக்குழுவினருக்கு பாஜக அளித்த உறுதிமொழியை நிறைவேற்றித் தருகிறோம்' என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... அடுத்தது அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம்!