விண்வெளியிலிருந்து தரையிறங்கிய டிராகன் விண்கலம் - புகைப்படங்கள்
டான்ஸ் ஜோடி டான்ஸ் மீது இந்து முன்னணி புகார்; ஜீ தமிழுக்கு வந்த நோட்டீஸ் - என்ன நடந்தது?
`டான்ஸ் ஜோடி டான்ஸ்' ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ஒரு ரியாலிட்டி ஷோ. நடனத்தில் ஆர்வம் இருப்பவர்களுக்குப் பயிற்சி தந்து திறமையை அரங்கேற்றக் களமும் அமைத்துத் தரும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி மூலம் தங்களது திறமையை வெளிக்காட்டிய பலருக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், தற்போது ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் சில தினங்களூக்கு முன் நடனம் என்ற பெயரில் இந்துக் கடவுள்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இருந்ததாகச் சொல்லி நேற்று முந்தினம் இரவு 10 மணிக்கு இந்து முன்னணி அமைப்பானது ட்விட்டர் தளத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகனை டேக் செய்து சேனல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைத்தது.
இந்நிலையில் மத்திய அமைச்சரின் பதில் நடவடிக்கை உடனடியாக கிடைத்திருக்கிறது.

அதாவது அடுத்த அரை மணி நேரத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திலிருந்து ஜீ தமிழ் சேனலுக்கு நோட்டிஸ் பறந்திருக்கிறது.
அந்த நோட்டிஸும் இந்து முன்னணி அமைப்புக்கு கிடைக்க, உடனே மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டது இந்து முன்னணி.

ஜீ தமிழ் சேனலுக்கு மத்திய அரசு அனுப்பியிருக்கும் நோட்டிஸில், 12/7/25 அன்று ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி கேபிள் டெலிவிஷன் விதிமுறைகளை மீறி இருப்பதாகப் புகார்கள் வந்துள்ளன. எனவே இந்த நோட்டிஸ் கண்ட 7 நாட்களூக்குள் விளக்கம் தரப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்' எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.