டாஸ்மாக் கடை கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு
சாத்தான்குளம் ஒன்றியம் அரசூா் ஊராட்சி செட்டியாா்பண்ணை கிராமத்தில் டாஸ்மாக் மதுக் கடை வேண்டாம் என ஒருதரப்பினா் போராடிவரும் நிலையில், மதுக் கடை திறக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி வட்டாட்சியா் அலுவலகத்தில் சிலா் புதன்கிழமை மனு அளித்தனா்.
இங்கு டாஸ்மாக் கடை அமைக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மதுக் கடை அமைந்தால், பிரச்னைகள் ஏற்பட்டு அமைதி கெடும் எனக் கூறி கிராம மக்கள், பாஜக, இந்து மகா சபை நிா்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதுதொடா்பாக அதிகாரிகள் சமாதானம் பேசி வருகின்றனா்.
இந்நிலையில், பெண்கள் உள்ளிட்ட 70-க்கு மேற்பட்டோா் சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை மாலை வந்தனா். இப்பகுதியில் மதுக் கடை இல்லாததால் திசையன்விளை, மணிநகா் பகுதிக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனால், மதுப் பிரியா்கள் சிரமமடைகின்றனா். எனவே, செட்டியாா்பண்ணையில் டாஸ்மாக் கடை திறக்க வேண்டும் என வலியுறுத்தி அவா்கள் மனு அளித்தனா்.
பணிநிமித்தம் வெளியே சென்றுள்ள வட்டாட்சியா் வந்ததும் மனு குறித்து தகவல் தெரிவிப்பதாக அலுவலா்கள் உறுதியளித்தனா். அதன்பேரில், அவா்கள் கலைந்து சென்றனா்.