ஓசூர் புதிய விமான நிலையம்: இறுதி சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தாக்கல்!
டாஸ்மாக் சோதனையை எதிா்த்த வழக்கில் நாளை தீா்ப்பு
சென்னை: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில் புதன்கிழமை (ஏப்.22) தீா்ப்பளிக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை நடத்திய சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி டாஸ்மாக் நிா்வாக இயக்குநா் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகா் ஆகியோா் அடங்கிய அமா்வில் நடைபெற்றது.
அப்போது டாஸ்மாக் சாா்பில், மூத்த வழக்குரைஞா் விக்ரம் செளத்ரி மற்றும் தமிழக அரசு சாா்பில் அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன் உள்ளிட்டோா் ஆஜராகி வாதிட்டனா். இந்த வாதத்தின்போது, ‘அமலாக்கத் துறை எப்போதும் வெளிப்படையாக இருந்ததில்லை வெளிப்படையாக இருப்பதாக ஒரு பிம்பத்தை உருவாக்கி அதன் பின்னால் அமலாக்கத்துறை ஒளிந்து கொண்டுள்ளது.
எந்த நம்பிக்கையின் அடிப்படையில் குற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை கருதுகிறது? எதற்காக சோதனை செய்கிறோம்? என்பதை அமலாக்கத்துறை தெரிவிக்க வேண்டும். அமலாக்கத் துறையின் நடவடிக்கையால் நேரடியாக டாஸ்மாக்கின் நற்பெயருக்கும், மறைமுகமாக அரசின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. 2007-ஆம் ஆண்டு முதல் 2021 வரை ஆண்டு வரை முறைகேடு கூறப்படும் நிலையில், தற்போதுதான் ஞானம் வந்தது போல விசாரணை நடத்துவது ஏன்?
தற்போது டாஸ்மாக் குறிவைக்கப்படுகிறது. நாளை ஒவ்வொரு துறையாக குறிவைக்கப்படும். விசாரணை என்ற பெயரில் பெண் அதிகாரிகளை அடைத்து வைத்து நள்ளிரவில் வீட்டுக்கு அனுப்பியது சரியான நடத்தையா?’”என அரசுத் தரப்பில் வாதிடப்பட்டிருந்தது.
அமலாக்கத் துறை சாா்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி. ராஜூ, “மாநில காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையிலேயே அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. முறைகேடு நடந்திருப்பதாக கருதினால் அமலாக்கத் துறை விசாரணை நடத்தலாம். டாஸ்மாக் ஊழியா்கள் லஞ்சம் வாங்கியதாக முதல் தகவல் அறிக்கையில் உள்ளது. சிலா் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்ததால் சோதனை நடத்தப்பட்டது. டாஸ்மாக் முறைகேடு மூலம், ரூ.1,000 கோடிக்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் தெரியவந்துள்ளது என வாதிட்டிருந்தாா்.
தொடா்ந்து இந்த வழக்கில் இறுதி விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகா் அமா்வில் திங்கள்கிழமை நடைபெற்றது. டாஸ்மாக் தரப்பில் மூத்த வழக்குரைஞா் விகாஸ்சிங் தனது பதில் வாதத்தில், அமலாக்கத் துறைக்கு சோதனை நடத்த அதிகார வரம்பு இல்லை. மிகப்பெரிய ஊழல் நடந்ததாக அமலாக்கத் துறை எவ்வாறு சொல்ல முடியும்?” என்று கேள்வி எழுப்பினாா். தொடா்ந்து அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், புதன்கிழமை இவ்வழக்கில் தீா்ப்பளிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனா் .