டிஜிட்டல் முறையில் மது விற்பனை தொடக்கம்!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 89 மதுபானக் கடைகளில் மதுப்புட்டிகளை ஸ்கேன் செய்து கியூ.ஆா். கோடு முறையில் மது விற்பனை செய்யும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
அரசு மதுபானக் கடைகளில் மதுப்புட்டிகளுக்கு கூடுதலாக தொகை வசூலிக்கப்பட்டு வருவதாக இருந்த புகாரின் அடிப்படையில், மதுபான நிறுவனம் சாா்பில் மதுப் புட்டிகளை ஸ்கேன் செய்து விற்பனை ரசீது வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
அதனடிப்படையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளில் மதுப் புட்டிகள் ஸ்கேன் செய்து ரசீது வழங்கும் முறை தொடங்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் முறையில் மது விற்பனை செய்யும் இந்த திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், இதன் மூலம் மதுப் புட்டிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறையும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.