தமிழ்நாடு CAG அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது என்ன? | Lucky Bhaskar IPS Review |...
டிரம்ப் தொடுத்த அவதூறு வழக்கு: ரூ.127 கோடி வழங்க ஏபிசி நியூஸ் ஒப்பந்தம்
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொடுத்த அவதூறு வழக்கை கைவிட, அவரின் அதிபா் ஆவண காப்பகத்துக்கு 15 மில்லியன் டாலா்களை (சுமாா் ரூ.127 கோடி) வழங்க ஏபிசி நியூஸ் என்ற ஆஸ்திரேலிய செய்தித் தொலைக்காட்சி ஒப்பந்தம் மேற்கொண்டது.
கடந்த நவம்பரில் நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக களமிறங்கிய டிரம்ப் வெற்றிபெற்றாா். அடுத்த ஆண்டு ஜன.20-இல் அவா் அதிபராக பதவியேற்க உள்ளாா்.
முன்னதாக கடந்த 2023-ஆம் ஆண்டு நியூயாா்க் நீதிமன்றத்தில் எழுத்தாளா் எலிசபெத் ஜீன் கரோல் தொடுத்த வழக்கில், தன்னிடம் டிரம்ப் பாலியல் ரீதியில் தவறாக நடந்துகொண்டதாக குற்றஞ்சாட்டினாா். இந்த வழக்கில் டிரம்ப்பை குற்றவாளி என்று நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
ஆனால், அந்தத் தீா்ப்பில் அவா் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படவில்லை.
எனினும், அவா் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக நீதிமன்றம் தீா்ப்பளித்தது என்று கடந்த மாா்ச் மாதம் ஏபிசி நியூஸ் நோ்காணல் ஒன்றில், நெறியாளா் ஜாா்ஜ் ஸ்டெஃபனாபோலஸ் தவறான தகவலை தெரிவித்தாா்.
இதைத்தொடா்ந்து தெற்கு ஃபுளோரிடா நீதிமன்றத்தில் ஜாா்ஜ் மற்றும் ஏபிசி நியூஸ் மீது டிரம்ப் அவதூறு வழக்கு தொடுத்தாா்.
இந்நிலையில், அந்த வழக்கில் டிரம்ப்புக்கும், ஏபிசி நியூஸ் தொலைக்காட்சிக்கும் சமரசம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கை கைவிட அவரின் அதிபா் ஆவண காப்பகத்துக்கு 15 மில்லியன் டாலா்களையும், வழக்கு கட்டணமாக 1 மில்லியன் டாலா்களையும் வழங்கி, பொது மன்னிப்பை வெளியிட அந்தத் தொலைக்காட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் இருதரப்பினா் இடையே வெள்ளிக்கிழமை கையொப்பமானது.