மிட்செல் மார்ஷ், அய்டன் மார்க்ரம் அதிரடி: ஹைதராபாதுக்கு 206 ரன்கள் இலக்கு!
டிராவிஸ் ஹெட்டுக்கு கரோனா: ஹைதராபாத் அணிக்கு பின்னடைவு!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் இந்தியாவுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர்ப் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால், பல்வேறு அணிகளைச் சேர்ந்த வெளிநாட்டு வீரர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.
இதனிடையே, சில நாள்கள் இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் ஐபிஎல் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. மிட்செல் ஸ்டார்க், ஜேக் ஃப்ரேசர் உள்ளிட்ட வீரர்கள் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகிய நிலையில், கம்மின்ஸ், ரபாடா, ஹெட் உள்ளிட்டோர் மீண்டும் இந்தியாவுக்கு வருவதாக தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் டிராவிஸ் ஹெட்டின் பயணத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் இன்று இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், உடல்நிலையைப் பொறுத்து மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவார் என்றும் செய்தியாளர்களுடனான சந்திப்பில் வெட்டோரி குறிப்பிட்டிருந்தார்.
ஹைதராபாத்துக்கு பின்னடைவு
நடப்பு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி விளையாடிய 11 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 7 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. மழையால் ஒரு போட்டி ரத்தானது.
புள்ளிப் பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணி, ஏற்கெனவே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ள நிலையில், மீதமுள்ள போட்டிகளில் சிறப்பாக விளையாடும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.
இந்த நிலையில், நடப்பு தொடரில் ஹைதராபாத் அணிக்காக இரண்டு அரைசதங்கள் உள்பட 281 ரன்கள் குவித்துள்ள ஹெட் விளையாடாதது பின்னடைவாக கருதப்படுகிறது.