டீக்கடை இல்லாம தினமும் 16,000 பேருக்கு டீ, காபி - மதுரை பைலட்டின் Cup Time கதை | `StartUp' சாகசம் 33
கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிதான் பரபரப்பான விவாதப் பொருளாகியிருக்கிறது. ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த தேநீர்க் கடைச் சங்கிலிகள், இன்று என்ன நிலையில் இருக்கின்றன என்பதை அந்த நிகழ்ச்சி காட்டியது. இது வெறும் நிகழ்ச்சி மட்டுமல்ல, வணிக உலகில் திணிக்கப்படும் திட்டங்களுக்கும், உண்மையிலேயே சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்யும் முயற்சிகளுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் கச்சிதமாகக் காட்டுகிறது.
உண்மையில், ஒவ்வொரு வணிகமும் தன் சந்தை வாய்ப்பைப் பெறுவது அதன் தேவையின் அடிப்படையில்தான். வணிகம் என்பது தேவையை கருத்தில் கொள்வது, திணிப்பது அல்ல! ஆனால், நாம் பெரும்பாலான நேரங்களில் இந்தத் திணிப்பைப் பற்றியே விவாதித்துக் கொண்டிருக்கிறோம். சந்தையைச் சரியாக அலசாமல், பெரும் முதலீட்டில் களத்தில் குதிப்பது உண்மையில் ஒரு பெரிய சவால்.

இந்தியா உலகின் இரண்டாவது பெரிய தேநீர் உற்பத்தி நாடாகவும், மிகப்பெரிய தேநீர் நுகர்வோராகவும் திகழ்கிறது. தேநீர் என்பது இந்தியர்களின் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்த ஒரு கலாசாரப் பானம். இந்தியாவில் ஒரு நபரின் சராசரி ஆண்டு தேநீர் நுகர்வு சுமார் 840 கிராம்! நகர்ப்புறங்களில் இது 925 கிராமாகவும், கிராமப்புறங்களில் 797 கிராமாகவும் உள்ளது.
இந்தியாவில் தேநீர் விநியோகச் சந்தை ஒரு வலுவான வளர்ச்சிப் பாதையில் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. சரியான சந்தைப்படுத்தல் உத்திகள், வாடிக்கையாளர் தேவைகளைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் நிலையான புதுமைகளுடன், தேநீர் விநியோக வணிகங்கள் இந்த வளர்ந்து வரும் சந்தையில் பெரும் வெற்றியைப் பெற முடியும்.
இந்தச் சந்தையை மிகச்சரியாக ஆராய்ந்து அதை சரியாகப் புரிந்துகொண்டு, மதுரை மாநகரை மையமாகக் கொண்டு ஒரு நிறுவனம் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. அவர்கள் தேநீர்க் கடைகளுக்குப் பதிலாக, ஒரு பிரமாண்டமான தேநீர் மற்றும் காபி உற்பத்தி மையத்தை அமைத்து, மதுரை முழுவதும் உள்ள சிறு, குறு நிறுவனங்களின் பணியாளர்களுக்கு தினமும் 16,000 பேருக்கு தேநீர் மற்றும் காபி விநியோகம் செய்து வருகின்றனர்.
இது வெறும் டீக்கடை அல்ல!
கப் டைம் (Cup Time) நிறுவனம் ஒரு உணவு நிறுவனமகச் செயல்பட்டு, 8 வகையான பானங்களுடன் தொடர்ந்து மதுரை முழுதும் விநியோகம் செய்து வருகிறது, இப்போது கோயம்புத்தூரிலும் கிளையை ஆரம்பித்துள்ளது. இது,சந்தையின் தேவையை உணர்ந்து, புதுமையான முறையில் அதை அணுகினால், வெற்றி நிச்சயம் என்பதற்கு ஒரு அருமையான உதாரணம். கப் டைம் (Cup Time) நிறுவன சாகசக் கதையை அதன் நிறுவனர் பிரபாகரன் வேணுகோபால் அவர்கள் நம்மிடையே பகிர்கிறார்.

``எல்லோருமே டீ கடைகளுக்கு கிளைகள் எடுத்து செயல்படுத்தும்போது நீங்கள் வணிக நிறுவனங்களை மட்டுமே இலக்காக வைத்து சிறு, குறு, பெரும் நிறுவனங்களுக்கு சந்தா அடிப்படையில் டீ விநியோகிக்கலாம் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது?”
``அடிப்படையில் என்னுடைய குடும்பம் தங்க நகைக்கடை வணிகம் செய்யும் குடும்பம், பைலட் ஆக வேண்டும் என்பது என்னுடைய ஆர்வம். குடும்பத்தினரும் பைலட் பயிற்சி முடிக்க ஒரு நிபந்தனையுடன் அனுமதித்தனர். 5 ஆண்டுகளுக்கு என்னுடைய ஆர்வத்தில் தொடர்ந்தாலும், மீண்டும் குடும்பத் தொழிலுக்குள் வரவேண்டும். எனவே அமெரிக்காவில் பைலட் பயிற்சி முடித்த பின் பைலட் பயிற்சியாளராக பணிபுரிந்தேன். எனக்கு கொடுக்கப்பட்ட காலமும் அதற்குள் முடிவடைந்தது. ஊருக்கு வந்து குடும்பத் தொழிலை கவனித்து வந்தேன். அப்போது எங்கள் வணிகத்தில் நான் கண்டறிந்த ஒரு சிக்கல் என்னென்னவென்றால் நகைக்கடையில் நல்ல கூட்டம் உள்ள நேரத்தில் வாடிக்கையாளருக்கு டீ, காபி வாங்கி வர ஆட்களை அனுப்புவோம். அவர் சென்ற நேரம் பார்த்து கூட்டம் இன்னும் அதிகரிக்கும், அந்த ஒருவர் டீ வாங்க செல்லாமல் இருந்திருந்தால் வாடிக்கையாளரை கவனித்திருக்கலாம், அது வணிகத்தை அதிகப்படுத்தியிருக்கும்.
அதே நேரத்தில் ஒரு நிறுவனம் காபி மேக்கர் இயந்திரம் வைத்திருந்தால் அதன் பராமரிப்பு, மூலப்பொருள் கொள்முதல் என எல்லாமே வைத்திருக்கணும். அதுவும் இல்லாமல் வேலை பார்க்கிறவர்களை நமது வாடிக்கையாளருக்கு டீ வாங்கிட்டு வரச்சொன்னாலோ, டீ போடச்சொன்னாலோ மனதுக்கும் எரிச்சல் படுவார்கள். மதுரையில் தங்க நகைக்கடை வணிகம் செய்யும் சிறு குறு நிறுவனங்கள் 3000 -ம் மேல் கடைகள் இருக்கு, அப்போ எல்லாருக்கும் இந்தப் பிரச்சனை இருக்கும். அப்ப எல்லா கடைகளுக்கும் டீ, காபி குறிப்பிட்ட நேரத்தில் வழங்கினால் நன்றாக இருக்குமே என்ற அடிப்படையில் ஆரம்பித்தது தான் கப் டைம்.”
``ஒரு விமான பைலட் ஆக இருந்த நீங்கள் திடீரென கடைகளுக்கு டீ கொடுக்கப்போகிறேன் என்று சொல்லும்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது? உங்கள் குடும்பத்தினர் மனநிலை எப்படி இருந்தது?”
``விமான பைலட் ஆக இருந்துட்டு இலட்சக்கணக்கான சம்பளத்தை விட்டுட்டு டீ காப்பி வணிகம் செய்யப்போகிறேன் என்று சொல்லும்போது என்னுடைய குடும்பத்தினர் ரொம்பவே யோசித்தார்கள், மற்ற வணிகமானால் பரவாயில்லை. அதுவும் பைலட் ஆக இருந்து இப்படி செய்கிறாயா என்று என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என்னை கேலி செய்தார்கள், பார்க்கிறவர்கள் எல்லாம் என்னை பைத்தியக்காரனா நீ அப்படி என்று எல்லாரும் கேட்டார்கள், ஒரு கட்டத்தில் அதுவே நான் சாதித்து காட்டணும் என்னு ஒரு வெறி உருவாகியிருந்தது, டீ காபி டெலிவரியை நாங்கள் ஒரு கிளவுட் கிட்சன் போல ஒரு இடத்தில் டீ/காபி உற்பத்தி மையத்தைக் உருவாக்கி ஒழுங்கமைக்கப்பட்ட வழிமுறைகளுடன் (சிஸ்டம்) செய்யணும், அதுவும் புதிய வணிக யுக்தியாக, ஒரு பேர் சொல்லும் பிராண்டாக இருக்கவேண்டும் என்றும் எண்ணம் உருவாகியது.

``உங்கள் சந்தையில் நீங்கள் ஆரம்பத்தில் சந்தித்த தடைகளை எதிர்கொள்ள என்ன உத்திகளைப் பயன்படுத்தினீர்கள்?”
``பொதுவாக எங்கள் வாடிக்கையாளர்கள் அவர்களின் தொழிலில் வேலை ஆட்கள் வைத்திருப்பார்கள். அவர்களுக்கு டீ மற்றும் காபி தேவைப்படும். அவர்களின் வேலை நேரத்தை மிச்சப்படுத்தும் நோக்கத்தில், நாங்கள் அவர்களின் இடத்திற்கே சென்று டெலிவரி செய்கிறோம். இந்த தொழில் பருவநிலைக்கு ஏற்ப செய்யும் வணிகம் கிடையாது மற்றும் எல்லோராலும் தினமும் பயன்படுத்தத் தேவையானது. ஒருநாள் எங்கள் சுவையில் தரம் குறைந்தாலும் வணிகம் பாதிக்கப்படும். எனவே புதிய நிறுவனமாக இருந்தாலும் நம்பிக்கை ஏற்படுத்துவது மற்றும் நமது சேவையின் தரத்தை எடுத்துச் சொல்வது ஒரு பெரிய சவாலாக இருந்தது. அதற்காக நாங்கள் சில முக்கியமான உத்திகளை பயன்படுத்தினோம்.
Free Sample - இதனால் வாடிக்கையாளர்கள் எங்களை பரிசோதிக்கத் தயங்கவில்லை.
Quality - தரமான சேவையை சீராக வழங்கியதால் எங்களது வாடிக்கையாளர்கள் மற்ற புதிய வாடிக்கையாளர்களை பரிந்துரை செய்தனர்.
Market research and competitive analysis - இதன் மூலமாக நாங்கள் எங்கே வேறுபட வேண்டும் என்பதை தெளிவாக திட்டமிட்டோம்.
SOP - Standard Operating Procedure - எங்களது business-ல் operation challenge-ஐ கட்டுக்குள் கொண்டு வந்தோம்.
Customer satisfaction - வாடிக்கையாளர் கருத்துகளை சீராக கேட்டு, உடனடி சேவை திருத்தங்களை மேற்கொண்டோம். இது நம்பிக்கையை ஏற்படுத்த உதவியது.
``உங்கள் முதன்மை கவனம் B2B சந்தையில் உள்ளதா? அலுவலகங்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு விநியோகம் செய்கிறீர்கள். வணிக நிறுவனங்களுக்கு மட்டுமே சேவை செய்வதில் நீங்கள் என்ன குறிப்பிட்ட சவால்களையும் வாய்ப்புகளையும் சந்தித்தீர்கள், உங்கள் சந்தா மாடல் இதைத் தீர்க்க எவ்வாறு உதவியது?”
``முக்கிய சவால் ஒன்று "டீ, காபிகளை 1/2 லிட்டர், 1 லிட்டர் பிளாஸ்குகளில் விநியோகம் செய்யும்போது பிளாஸ்குகளை மீண்டும் பெறுவதில் சிக்கல் வந்தது. எங்களிடம் இருந்து வாங்கும் பிளாஸ்குகள் எங்களுக்கு திரும்பி வராத நிலையில் அதற்கு ஒரு வழிமுறைகளை தொழில்நுட்பம் வழியே உருவாக்கினோம், ஒவ்வொரு பிளாஸ்க்கும் ஒரு க்யூஆர் கோடை செட் செய்தேன். அதில், பிளாஸ்க்கில் உள்ள பொருள் என்ன?, யார் அதை விநியோகம் செய்கிறார்? யாருக்கு அது விநியோகம் செய்யப்படுகிறது? போன்ற தகவல்கள் அடங்கியிருக்கும். இதன் மூலம் பிளாஸ்குகள் காணாமல் போவது குறைந்தது.
எந்த நிறுவனத்திற்கும் ஒரு செயல்பாட்டு முறை அவசியம், அதை கீழ்கண்ட வகையில் நாங்கள் செயல்படுத்துகிறோம்.
Standard Quality: நிறுவனங்களுக்கு தினமும் ஒரே தரத்துடன் சேவை வழங்குவது மிக முக்கியம். ஒரு நாளும் குறைவு இருந்தால், அவர்கள் நம்பிக்கையை இழக்க வாய்ப்பு அதிகம்.
Perfect delivery with time: அலுவலகங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான தேநீர் இடைவெளி நேரம் மிகவும் முக்கியம் – ஒரு சில நிமிட தாமதம் கூட புகார்கள் உருவாக்கும்.
Price competition and bulk buying attitude: நிறுவனங்கள் குறைந்த விலையில் அதிக அளவு தேவைப்படுவதால், நாங்கள் தரம் குன்றாமல் விலை சமநிலையில் வைத்திருக்க வேண்டியது சவாலாக இருந்தது.

எங்கள் சந்தா மாதிரி (Subscription Model) ... இதன் மூலமாக வாடிக்கையாளர்களிடம் Monthly, weekly என ஒப்பந்தம் கொள்கிறோம்.
இதனால் வருமானம் உறுதி செய்ய முடிந்தது மற்றும் விநியோக திட்டங்களை திட்டமிட்டு செயல்படுத்த வசதியாக இருந்தது.
வாடிக்கையாளர்களுக்கு பணம் தவறாமல் செலுத்தும் அமைப்பு (auto-invoice/reminder system) மூலம் நாங்கள் சேவையில் தாமதமின்றி நிலைத்திருக்கிறோம்.
எங்கள் Cup Time Mobile app மூலம் சந்தா புதுப்பிப்பு, டீ எங்கே வருகிறது, எவ்வளவு நேரத்தில் கிடைக்கும் என்பது குறித்த விபரங்கள், பாதுகாப்பான பண பரிவர்த்தனைகள் போன்ற வசதிகள் B2B வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை அதிகரித்தது.
Mobile App வசதி: எங்கள் சொந்த மொபைல் செயலியில் வாடிக்கையாளர்கள் சந்தாவை புதுப்பிக்க, விநியோக நேரத்தைப் பார்க்க, புகார்கள் பதிவு செய்ய, மற்றும் பில்களை தரவிறக்கம் செய்ய பயன்படுத்தலாம்.
GPS அடிப்படையிலான டெலிவரி கண்காணிப்பு: Tea/Coffee டெலிவரிகள் நேரத்திற்கு வந்து சேர்கிறதா என்பதை உறுதி செய்ய GPS ட்ராக்கிங் வசதி கொண்டு டெலிவரி நிர்வாகம் எளிமையாக்கப்பட்டுள்ளது.
Auto-Invoice & Reminder System: மாதம் முடிவில் தானாக பில்கள், நினைவூட்டல்கள், மற்றும் பண பரிவர்த்தனையை செலுத்தும் முகவரி வாடிக்கையாளருக்கு அனுப்பப்படுகின்றன. இதனால் தனியாக ஒரு ஆள் பணம் வாங்கத் தேவையில்லை.
வாடிக்கையாளர் கருத்து சேகரிப்பு (Feedback System): ஒவ்வொரு டெலிவரிக்குப் பின் வாடிக்கையாளரிடம் feedback கேட்கும் automated system உள்ளதால், சேவை தரத்தில் எவ்வித குறை இருந்தாலும் உடனே சரி செய்ய முடிகிறது.
தரவுகளின் பகுப்பாய்வு (Data Analytics): வாடிக்கையாளர் பழக்கவழக்கங்கள், அதிக தேவை உள்ள நேரங்கள், அதிக order அளவுகள் போன்றவற்றை அழுத்தமான data analysis மூலம் தெரிந்து, நாங்கள் பாதுகாப்பான திட்டமிடல் செய்கிறோம்.
``நீங்கள் மதுரையில் மட்டும் செயல்படுகின்றீர்களா? அல்லது வேறு நகரங்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளீர்களா?”
``நாங்கள் மதுரை மற்றும் கோயம்புத்தூரில் செயல்பட்டு வருகிறோம் மேலும் மற்ற அனைத்து ஊர்களிலும் கிளைகள் மூலம் கொடுத்து வருகிறோம்.”
``ஒரு நாளைக்கு நீங்கள் விநியோகம் செய்யும் அளவு என்ன? எத்தனை பேர் பணி புரிகின்றார்கள்?”
``எங்களிடம் 8 வகையான தயாரிப்புகள் உள்ளது, அதைக்கொண்டு நாங்கள் ஒரு நாளுக்கு 15,000 முதல் 16,000 கப் வரை விநியோகம் செய்து வருகிறோம். எங்களது கம்பெனியில் 40 முதல் 50 வரை வேலை ஆட்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.”

``கடந்த சில வாரங்களாக டீ கடை கிளைகள் ஆரம்பிப்பது குறித்து பெரும் விமர்சனம் எழுந்துள்ளது. அதே சமயம் நீங்களும் வணிக நிறுவனங்களுக்கு டீ விநியோகம் செய்வதை கிளைகள் கொடுத்து வருகிறீர்கள். அந்த விமர்சனத்தை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள்? உங்கள் கிளைகள் நஷ்டமாவதை தடுக்க உங்களிடம் என்ன வகையான வழிமுறைகள் உள்ளது?”
``அண்மைக் காலமாக டீ கடைகள் பெருமளவில் திறக்கப்படுவதால், பொதுவாகவே அதற்கும், அதன் வணிகத்திற்கும் குறுக்கீடாகும் வகையில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் Cup Time-இன் செயல்முறை மற்றும் நோக்கம் அதிலிருந்து மாறுபட்டு உள்ளது.
நிறைய டீ கடைகள் வருகிறது, அவர்கள் டீ கடை கிளைகள் கொடுக்கிறார்கள், 10 லட்சம் செலவிலும், 5 லட்சம் செலவிலும், 1 லட்சம் செலவிலும் டீ கடைகள் அமைக்கிறார்கள். நாங்கள் கப்டைம் கிளைகள் கொடுப்பது வணிக நிறுவனம் அதிகம் இருக்கும் ஊர்களில் அங்கே நிச்சயம் அதிகமான பணியாளர்கள் இருப்பார்கள், அவர்களுக்கு நிச்சயம் டீ, காபி கொடுக்கவேண்டும், அதை நாங்கள் கொடுக்கிறோம்.
ஒரு டீ கடையில் டீ எப்போது காலியாகும் என்று தெரியாது. ஆனால் நமது நாளைய தேவை எவ்வளவு என்று முன்கூட்டியே நமக்கு தெரிந்துவிடுவதால், காலையில் எவ்வளவு டீ, மதியம் எவ்வளவு டீ என எல்லா விவரமும் நமக்கு முன்கூட்டியே தெரிந்துவிடுவதால் தேவையை அறிந்து செயல்படலாம். எங்கள் வணிகத்தின் முக்கிய பணியே செயல்படுத்துதல் தான், எங்கள் செயல்படுத்துதலை நாங்கள் தொழில்நுட்பம் வழியே டீ விற்பனையை உணவு சார் தொழில் நிறுவனமாக கொண்டு வந்திருக்கின்றோம்.
எங்கள் தொழில்நுட்பமும், எங்கள் செயல்பாட்டு முறையும் தான் எங்கள் பலமே. கப் டைமுக்கு கிளைகள் எடுப்பவர்கள் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களை எளிதாக மேலாண்மை செய்யலாம்.
இப்படித்தான் எங்கள் கப்டைம் நிறுவனத்தின் செயல்பாடுகளை கட்டமைத்துள்ளோம்.
எங்களது செயல்பாடு...
எங்களது மாடல் - நேரடி வணிக (B2B) சேவை:
நாங்கள் மற்ற டீ கடைகள் போன்று பொதுமக்களுக்கு திறந்த இடமாக செயல்படவில்லை. எங்களது மையமான கவனம் நிறுவனங்களுக்கு நேரடி விநியோகம் (B2B service). அதாவது, கிளைகளும் கூட "walk-in" shop-களாக இல்லாமல், சேர்ந்த தயாரிப்பு மற்றும் விநியோக மையங்களாக செயல்படுகின்றன.
விமர்சனங்களை நாங்கள் எப்படி எதிர்கொள்கிறோம்:
தரமான மற்றும் சுத்தமான தயாரிப்பு,
அதிக வரிச்சுமை இல்லாத (low-overhead) மாடல்,
உண்மையான தேவை உள்ள இடங்களில் மட்டும் கிளைகள் ஏற்படுத்துவது என்பவைகளை நாங்கள் பின்பற்றி வருகிறோம். அதனால், பொதுவான விமர்சனங்களுக்கு பதிலாக நாங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்ட தரவுகளுடனும், நம்பிக்கையான சேவையின் வழியாகவும் பதிலளிக்கிறோம்.
நஷ்டத்தைத் தவிர்க்க நாங்கள் எடுத்துள்ள வழிமுறைகள்:
இடம் சார்ந்த தேவை பகுப்பாய்வு: ஒரு கிளையைத் திறப்பதற்கு முன் அந்த பகுதியில் B2B தேவையை நாங்கள் மிக நேர்த்தியாக ஆய்வு செய்கிறோம்.
திட்டமிடல்: தேவைக்கு ஏற்ப பொருட்கள், பணியாளர்கள் மற்றும் சரக்கு இயக்கங்கள் அனைத்தும் திட்டமிட்ட முறையில் செயல்படுகின்றன.
மாதாந்திர செயல்திறன் கண்காணிப்பு & கருத்து: ஒவ்வொரு கிளையின் செயல்திறனும், வாடிக்கையாளர் கருத்துகளும் நேரடியாக மையத்திற்கு அறிக்கையாக வருவதால், விரைவாக திருத்த நடவடிக்கைகள் எடுக்க முடிகிறது.
விமர்சனங்களை நாங்கள் விமர்சனமாக அல்ல, வளர்ச்சி சாத்தியங்களாக பார்க்கிறோம். நாங்கள் ஒரு "tea shop" இல்லாமல், கட்டமைக்கப்பட்ட, தரத்தில் முதலிடம் பெறும் B2B-ஆக்கான தீர்வு என்பதையே வலியுறுத்துகிறோம். அதே சமயம் நாங்களும் கிளைகளை கொடுத்து வருகின்றோம், இது டீ கடையாக இல்லை, டீ உற்பத்தி மையமாக விநியோகம் செய்ய...
Startup TN வழங்கிய SEED Fund உங்கள் நிறுவனத்திற்கு எவ்வாறு உதவியது?
``Startup TN வழங்கிய டான்சீட் (Seed Fund) தொகை, Cup Time நிறுவன வளர்ச்சிக்குப் பெரும் ஆதாரமாக அமைந்தது. அந்த நிதி நம்மை ஒரு சாதாரண சேவை நிறுவனத்திலிருந்து, ஒரு தொழில்நுட்ப ஆதரவு பெற்ற திட்டமிடலோடு செயல்படும் B2B விநியோக நிறுவனமாக மாற்ற உதவியது.
1. தொழில்நுட்ப மேம்பாடு (Tech Development):
நாங்கள் நமது சொந்த mobile app, customer dashboard, delivery tracking system ஆகியவற்றை உருவாக்கத் தொடங்கினோம்.
இது நேர்த்தியான பரிமாற்றமும், நம்பகமான சேவையும் வழங்க உதவியது.
2. புதிய கிளை துவக்கம் & இயந்திரங்கள் (Infrastructure):
அந்த நிதியின் ஒரு பகுதியைக் கொண்டு தரமான Tea/Coffee preparation equipment, மற்றும் ஒரு புதிய பிராந்திய கிளையை திறக்க முடிந்தது.
3. தொழிலாளர்கள் பயிற்சி மற்றும் தகுதி மேம்பாடு:
Production, delivery, admin ஆகிய துறைகளில் உள்ள ஊழியர்களுக்கு training modules, uniforms, safety protocols கொண்டு வந்தோம்.
4. மார்க்கெட்டிங் மற்றும் Branding:
“Cup Time” என்ற brand-ஐ வலுப்படுத்துவதற்கான அடிப்படை விளம்பர முயற்சிகள் (brochure, digital posters, local ads) மேற்கொள்ளப்பட்டது.
Startup TN-இன் seed fund என்பது வணிகத்தை வளர்க்க மட்டுமல்ல, அதை ஒரு தொலைநோக்குடன் செயல்படும் முழுமையான சிஸ்டம் உருவாக்கத் தேவையான முதல்கட்ட தூணாக இருந்தது.”

"StartupTN Seed Fund"
தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் (ஸ்டார்ட்அப்டிஎன்) தமிழ்நாடு விதை நிதி, ஒரு புதிய தொழில்முனைவோர் தனது புதுமையான யோசனையை நனவாக்க, அதற்குத் தேவையான மூலதனம், வழிகாட்டுதல், ஆதரவு போன்றவற்றை அளிக்கிறது. இதற்காகவே உருவாக்கப்பட்ட ஒரு முக்கியமான கருத்தாக்கம் தான் "StartupTN Seed Fund".
StartupTN Seed Fund வழியாக முதலீடு மட்டும்தான் கிடைக்கும் என்பதில்லை.
யோசனையை நனவாக்குதல்: தங்கள் யோசனையைச் செயல்படுத்தத் தேவையான மூலதனத்தைப் பெறுதல்.
தொழில் வளர்ச்சி: திட்டப் பணி தயாரிப்பு, பொருள்/சேவை தயாரிப்பு மேம்பாடு, சந்தைப்படுத்தல், குழு விரிவாக்கம் போன்றவற்றிற்கு ஆலோசனை வழங்குதல்.
வல்லுநர் வழிகாட்டுதல்: Startup TN Seed Fund பெரும் நிறுவனங்கள், தொழில்முனைவோர்களுக்கு வணிகத் திட்டமிடல், சந்தை ஆராய்ச்சி, நிர்வாகம் போன்ற துறைகளில் வல்லுநர் வழிகாட்டுதலை வழங்குகின்றன.
நெட்வொர்க்கிங் வாய்ப்புகள்: விதை நிதி வழியாக, தொழில்முனைவோர்கள் முதலீட்டாளர்கள், தொழில் வல்லுநர்கள், மற்றும் பிற தொழில்முனைவோர்களுடன் இணைந்து செயல்பட வாய்ப்புகள் கிடைக்கின்றன.