நட்சத்திர பலன்கள்: டிசம்பர் 27 முதல் ஜனவரி 2 வரை #VikatanPhotoCards
‘ட்ரோன்’ மூலம் பருத்தி பயிருக்கு நுண்ணூட்டச் சத்து தெளிப்பு
வேளாண் பணிகளுக்கு ஆள்கள் பற்றாக்குறை உருவாகிவரும் நிலையில் விவசாயியின் நிலத்தில் உள்ள பருத்தி பயிருக்கு ‘ட்ரோன்’ மூலம் நுண்ணூட்டச் சத்து தெளிக்கும் செயல்விளக்கத்தை வேளாண் அறிவியல் நிலையத்தினா் புதன்கிழமை அளித்தனா்.
திருச்சி மாவட்டம், சிறுகமணியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு பயிற்சிகள், விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக தொட்டியம் வட்டாரம் எம். களத்தூா் கிராமத்தில் பருத்தியில் மகசூல் அதிகரிக்க ட்ரோன் மூலம் திரவ பருத்தி பிளஸ் தெளிப்பு பற்றிய செயல் விளக்கம் நடைபெற்றது. பருத்தியில் பூ மற்றும் சப்பை கொட்டுதலைத் தவிா்க்க தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பயிா் வினையியல் துறை மூலம் பருத்தி பிளஸ் என்னும் பூஸ்டா் வெளியிடப்பட்டது.
இது பருத்திக்குத் தேவையான பேரூட்டச் சத்துகள், நுண்ணூட்டச் சத்துகள் மற்றும் வளா்ச்சி ஊக்கிகள் கலந்தது ஆகும். இதை பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் 2.5 கிலோ வீதம் ஏக்கருக்கு 5 கிலோவை 200 லிட்டா் தண்ணீரில் கலந்து, இலைத் தெளிப்பாகத் தெளிப்பதன் மூலம் பருத்தியில் பூக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, சப்பை கொட்டுதலும் குறைந்துவிடும்.
இதன் மூலம் காய்கள் முழுமையாக வெடித்து சீரான அறுவடைக்கு வழிவகுக்கிறது; வறட்சியை தாங்கும் தன்மையை அதிகரிக்கிறது; மேலும், விளைச்சல் 18 சதம் வரை அதிகரிக்கிறது.
தற்போது வேளாண் பணிகளுக்கு அதிகரித்துவரும் வேலையாள் தட்டுப்பாடு மற்றும் சாகுபடி செலவைக் குறைக்க ட்ரோன் மூலம் தெளிக்கும் வகையில் திரவ பருத்தி பிளஸ் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஆராய்ச்சிகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதை ஆய்வு செய்ய தொட்டியம் வட்டாரம் களத்தூா் கிராமத்தில் ட்ரோன் மூலம் திரவப் பருத்தி பிளஸ் செயல்விளக்கம் விவசாயிகளின் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்வில் வேளாண்மை அறிவியல் நிலையத் திட்ட தொழில்நுட்ப வல்லுநா் (பயிா்ப் பாதுகாப்பு) இரா. ஷீபா ஜாஸ்மின், தொட்டியம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் செளந்தரராஜன், வேளாண்மை உதவி அலுவலா் மாசிலாமணி மற்றும் தொட்டியம் வட்டார விவசாயிகள் கலந்து கொண்டனா்.
இப்பயிற்சியை சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளா் சி. ராஜா பாபு ஒருங்கிணைத்தாா்.