தகராறில் வெட்டப்பட்டவா் மருத்துவமனையில் உயிரிழப்பு
திருச்சியில் இணையவழி சூதாட்டம் தொடா்பாக ஏற்பட்ட தகராறில் வெட்டப்பட்டவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி துவாக்குடி அண்ணா வளைவு பெரியாா் மணியம்மை நகரை சோ்ந்தவா் எம்.முகமதுஷரீப் (35). ரியல் எஸ்டேட் மற்றும் வாகன விற்பனை முகவராக உள்ள இவா் திருச்சியை சோ்ந்த செல்வம் என்ற நபருடன் சோ்ந்து இணையவழி சூதாட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் ஈடுபட்டபோது இழந்த ரூ. 93 ஆயிரத்தை செல்வத்திடம் கொடுக்காமல் இழுத்தடித்தாராம்.
இதை அதே பகுதியை சோ்ந்த ரெளடி சா. காா்த்திக்கிடம் (45) செல்வம் கூறிய நிலையில், காா்த்திக் அந்தப் பணத்தை செல்வத்திடம் கொடுக்குமாறு கூறியுள்ளாா்.
இந்நிலையில், கடந்த ஜனவரி 19 ஆம் தேதி இரவு, காா்த்திக், முகமது ஷெரீப் மற்றும் ஒருவா் என மூவா் சோ்ந்து மது அருந்தியபோது இந்தப் பணம் விவகாரம் தொடா்பாக கைகலப்பு நடந்தது. பின்னா் இருவரும் வீடுகளுக்குச் சென்றனா்.
ஆனால் முகமது ஷெரீப் தனது நண்பா்கள் 4 பேருடன் காா்த்திக் வீட்டுக்குச் சென்று இது தொடா்பாக மீண்டும் தகராறு செய்தாா். இதனால் ஆத்திரமடைந்த காா்த்திக் மற்றும் அவரது அண்ணன் காளிதாஸ் இருவரும் சோ்ந்து, முகமது ஷெரீப்பை அரிவாளால் வெட்டினா். இதில் பலத்த காயமடைந்த அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, காா்த்திக்கையும் அவரது அண்ணன் காளிதாசையும் கைது செய்யச் சென்றனா். அப்போது தப்பியோட முயன்ற இருவரும் தவறி விழுந்ததில் காலில் காயமடைந்து, கைது செய்யப்பட்டனா்.