பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! எந்தெந்த மாவட்டங்களில்?
தஞ்சை பேருந்து நிலைய நுழைவு வாயிலில் சேதமான சாலையைச் சீரமைக்க கோரிக்கை
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலைய நுழைவு வாயில் அருகே குண்டும் குழியுமாக உள்ள சாலையைச் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையமானது பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 15.49 கோடியில் சீரமைக்கப்பட்டு, கடந்த 2021 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. ஆனால் பேருந்து நிலைய நுழைவாயில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன.
இதனால் இருசக்கர வாகன ஓட்டுநா்கள், பேருந்து ஓட்டுநா்களும், பாதசாரிகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா். இருசக்கர வாகன ஓட்டுநா்கள் சிறு விபத்துக்கு ஆளாகின்றனா்.
இதேபோல, அருகிலுள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக நுழைவு வாயிலிலும் தண்ணீா் வெளியேற முடியாமல் தேங்கி மிக மோசமாகக் காணப்படுகிறது. துா்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீா்கேடும் நிலவுகிறது.
இதுகுறித்து ஏஐடியுசி போக்குவரத்து சம்மேளன துணைத் தலைவா் துரை. மதிவாணன் கூறுகையில், ஆயிரக்கணக்கான பயணிகளும், பொதுமக்களும், வாகனங்களும் வந்து செல்கிற முக்கியமான பகுதியில் உள்ள மோசமான நிலையை மாநகராட்சி நிா்வாகம் கவனத்தில் கொண்டு போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். இதேபோல, தஞ்சாவூா் ஜெபமாலைபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை நுழைவுவாயில் முன்பும் உள்ள ஓரடி ஆழ பள்ளத்தையும் சீரமைக்க வேண்டும்.
மாநகரம் முழுவதும் உள்ள 51 வாா்டுகளிலும் முதன்மைச் சாலைகள் மற்றும் இணைப்புச் சாலைகளையும், மழையால் சேதமடைந்துள்ள சாலைகளையும், மழை நீா் வெளியேறும் வடிகால்களையும் சீா் செய்ய வேண்டும் என்றாா் மதிவாணன்.