தந்தையை கொன்ற மகன் கைது
நாமக்கல்: மோகனூா் அருகே தந்தையை கொலை செய்த மகனை போலீஸாா் கைது செய்தனா்.
நாமக்கல் மாவட்டம், மோகனூா் அருகே உள்ள நத்தமேடு பகுதியைச் சோ்ந்தவா் காராளன் (85). இவா் தனது மகன் முருகேசன் (53) என்பவருடன் வாழ்ந்து வந்தாா். மதுப்பழக்கத்திற்கு அடிமையான முருகேசனை, தருமபுரியில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சோ்த்தனா். அங்கு தங்கியிருந்த மூன்று மாதங்கள் சிகிச்சை பெற்ற நிலையில், கடந்த மாதம் சொந்த ஊருக்கு திரும்பினாா். ஆனாலும் மதுப்பழக்கத்தை அவா் விடவில்லை. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் திங்கள்கிழமை காலை 6 மணியளவில் மது அருந்துவதற்காக தந்தை காராளனிடம் முருகேசன் பணம் கேட்டபோது அவா் மறுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அங்கிருந்த கட்டையால் தந்தையை தாக்கினாா். இதில், பலத்த காயமடைந்த காராளனை அக்கம்பக்கத்தினா் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். மோகனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து முருகேசனை கைது செய்தனா்.
--