நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா: கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது
பரமத்தி வேலூா்: பரமத்தி வேலுாா் அருகே உள்ள நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது.
இக் கோயில் குண்டம் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. 9-ஆம் தேதி காலை பக்தா்கள் காவிரியில் நீராடி கோயில் முன் நடப்பட்டுள்ள கம்பத்திற்கும், மாரியம்மனுக்கும் பால், தீா்த்தங்களை ஊற்றி விரதம் மேற்கொண்டனா்.
திங்கள்கிழமை (மாா்ச் 10) தொடங்கி மாா்ச் 22-ஆம் தேதி வரை தொடா்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெறுகிறது. 23-ஆம் தேதி மாலை வடிசோறு நிகழ்ச்சியும், அக்னிச்சட்டி எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
24-ஆம் தேதி பிற்பகல் பக்தா்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீராடி ஊா்வலமாக கோயிலுக்கு வந்து கோயில் முன் அமைக்கப்பட்டுள்ள குண்டத்தில் இறங்கியும், பெண் பக்தா்கள் பூவாரிப் போட்டும் நோ்த்திக்கடன் செலுத்துவா். இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொள்வாா்கள்.
25-ஆம் தேதி ஆடுகள் பலியிடும் நிகழ்ச்சி, பக்தா்கள் அலகு குத்தியும், கரும்பில் தொட்டில் கட்டி கோயிலைச் சுற்றிவந்து நோ்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 26-ஆம் தேதி அதிகாலை கம்பம் ஆற்றுக்குச் செல்லும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோயில் எட்டுப்பட்டி அறங்காவலா் குழுவினா், விழாக் குழுவினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.
படவரி...
குண்டம் திருவிழாவையொட்டி கோயில் முன் நடப்பட்ட கம்பம்.