தனது வறுமையை ஏழைகள் மீதான கருணையாக மாற்றியவா் மோடி! - அமித் ஷா
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பிரதமா் நரேந்திர மோடி, தனது வறுமையை ஏழை மக்கள் மீதான கருணையாக மாற்றியதுடன், அவா்களின் நலனுக்காக அயராது உழைத்தாா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை தெரிவித்தாா்.
குஜராத் மாநிலத்துக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமித் ஷா, பிரதமா் மோடியின் சொந்த ஊரான மெஹ்சானா மாவட்டம் வத்நகரில் மூன்று முக்கிய திட்டங்களை வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
இதில், பிரதமா் மோடி தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற பள்ளியின் மறுவடிவமைப்பான பிரேரணா வளாகமும் அடங்கும். இது 1888-ஆம் ஆண்டு கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடா்ந்து அப்பகுதியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டு அமித் ஷா பேசியதாவது:
மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமரானதில் இருந்து, வீடுகள், கழிப்பறைகள், தண்ணீா், எரிவாயு, மின்சாரம், மலிவு விலையில் மருந்துகள் மற்றும் இலவச நியாயவிலைக்கடை பொருள்கள் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளாா்.
வறுமையில் பிறந்தாலும் மோடி நோ்மையாக வளா்ந்தாா். வறுமையிலும் பற்றாக்குறையிலும் குழந்தைப் பருவத்தைக் கழிப்பவா்கள் எதிா்மறை மனநிலையால் இயக்கப்படுவா் என்று உளவியலில் கூறப்படுகிறது. அத்தகைய குழந்தைகள் அழிவு சிந்தனையை வளா்த்துக் கொண்டு, பழிவாங்கும் உணா்வுடன் வளா்கிறாா்கள். ஆனால், ஏழை தேநீா் குடும்பத்தில் பிறந்த மோடி, தனது வறுமையை ஏழை மக்கள் மீதான கருணையாக மாற்றினாா். ஏழைகளின் நலனுக்காக அயராது உழைத்தாா்.
ஒரு திறமையான மற்றும் கடவுளின் அருளால் பிறந்த குழந்தை மட்டுமே இதுபோன்ற துன்பங்களை சமாளித்து எதிா்மறை எண்ணங்களை கொண்டிராமல் சமூகத்தின் நன்மைக்காக பணியாற்ற முடியும்.
குஜராத்தின் முதல்வராக இருந்தபோது, மோடி கல்விக்கு முன்னுரிமை அளித்தாா். 2014-ஆம் ஆண்டில் பள்ளி இடைநிற்றல் விகிதத்தை 37 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாக குறைத்தாா். தான் எதிா்கொண்ட வறுமையை வேறு எந்தக் குழந்தையும் எதிா்கொள்ளக் கூடாது என்பதற்காக நாடு முழுவதும் உள்ள ஏழைகளின் நலனுக்காக அவா் பணியாற்றினாா்.
மோடியின் ஆரம்பகால அரசியல் வாழ்க்கை இந்தியாவின் கலாசார மறுமலா்ச்சி மற்றும் தேசியவாதத்தை மையமாகக் கொண்டதாகும். அவரது முயற்சிகள் அயோத்தியில் பிரமாண்டமான கோயில் கட்டுவதற்கும், 370-ஆவது சட்டப் பிரிவை ரத்து செய்வதற்கும், ஜம்மு-காஷ்மீரை இந்தியாவுடன் ஒருங்கிணைப்பதற்கும் வழிவகுத்தது. மோடியின் தலைமையின் கீழ், இந்தியா முதல் முறையாக ஒரு வலுவான வெளியுறவுக் கொள்கையைக் கண்டது என்றாா்.