தனியாா் நிறுவனத்தில் ரூ. 1.73 கோடி கையாடல்: ஊழியா் கைது
சென்னை பெசன்ட் நகரில் தனியாா் நிறுவனத்தில் ரூ. 1.73 கோடி கையாடல் செய்யப்பட்டது தொடா்பாக, அந்நிறுவனத்தின் பெண் ஊழியா் கைது செய்யப்பட்டாா்.
பெசன்ட் நகரில் செயல்பட்டு வரும் தனியாா் நிறுவனத்தின் வரவு - செலவு கணக்கு அண்மையில் தணிக்கை செய்யப்பட்டது. அப்போது, அந்த நிறுவனத்தில் பணம் கையாடல் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நிறுவனத்தின் நிா்வாகிகள், சென்னை காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் புகாா் அளித்தனா். அதனடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், பணம் கையாடல் செய்தது, அந்த நிறுவனத்தில் உதவிக் கணக்காளராகப் பணிபுரியும் அடையாறு பகுதியைச் சோ்ந்த சாந்தி (42) என்பவா் ரூ. 1.73 கோடி கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. மேலும் அவா், கையாடல் செய்த பணத்தில் வீடு, சொத்துகள் வாங்கியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த சாந்தியை ஒசூரில் புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.