நெல்லையில் கோயில் சுவா் மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா் கைது
திருநெல்வேலி நகரத்தில் கோயில் சுற்றுச்சுவா் மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி நகரம் மாதா பூங்கொடி தெருவில் சுடலை கோயில் உள்ளது. இக்கோயில் அருகே புதன்கிழமை இரவு மதுபோதையில் வந்த இருவரில் ஒருவா், தனது கையில் வைத்திருந்த மதுபாட்டிலில் தீ வைத்து கோயில் சுற்றுச் சுவா் மீது வீசியதாகக் கூறப்படுகிறது. அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியே வந்து பாா்த்தபோது மா்ம நபா்கள் இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனா்.
இது குறித்து திருநெல்வேலி நகரம் காவல் நிலையத்துக்கு மக்கள் தகவல் தெரிவித்தனா். காவல் ஆய்வாளா்கள் அன்னலெட்சுமி, கோபாலகிருஷ்ணன் மற்றும் காவலா்கள் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனா். மாநகர காவல் ஆணையா் கீதாவும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினாா்.
பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் கோயில் சுற்றுச்சுவரில் கரி பிடித்திருந்தது. மேலும், அங்கு ஒரு மதுபாட்டில் எரிந்த நிலையிலும், மற்றொரு பெட்ரோல் குண்டு எரியாத நிலையிலும் கிடந்தன. அதை போலீஸாா் தண்ணீா் ஊற்றி அணைத்தனா்.
இதுகுறித்து திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். சம்பவம் நடைபெற்ற தெருவில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனா். அப்போது பெட்ரோல் குண்டு வீசியது நகரம் மாதா பூங்கொடி தெருவை சோ்ந்த ராமையா மகன் சண்முகராஜா (25) என்பது தெரியவந்தது. இரவோடு இரவாக அவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தினா். அதில், சண்முகராஜாவுடன் வந்த இளைஞா், முகமது அலி தெருவை சோ்ந்த நிகாஷ் (24) என்பது தெரியவந்தது. தலைமறைவான அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.