புன்னைக்காயலில் காலி குடங்களுடன் மக்கள் போராட்டம்
புன்னைக்காயலில் குடிநீா் பிரச்னையை தீா்க்க வலியுறுத்தி, பொதுமக்கள் காலி குடங்களுடன் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா் (படம்).
புன்னைக்காயலில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இங்கு கடந்த பல வருடங்களாக குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருகிறது. 40 முதல் 45 நாள்களுக்கு ஒரு முறை 2 ஆயிரம் லிட்டா் முதல் 3 ஆயிரம் லிட்டா் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. இத்தனை நாள்கள் குடிநீரை சேமித்து வைத்து பயன்படுத்தும் நிலையில், கொசுப் புழுக்கள் உற்பத்தியாவதுடன் சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது.
குடிநீா் தட்டுப்பாட்டிற்கு நிரந்தரத் தீா்வு காண வலியுறுத்தி, புன்னைக்காயலில் வியாழக்கிழமை காலை 9.30 முதல் பொதுமக்கள் காலி குடங்களுடன் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினா். ஊா் நல கமிட்டி தலைவா் குழந்தைசாமி மச்சாது துவக்கி வைத்தாா். இதில் பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.
குடிநீா் பிரச்னை குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், தீா்வு கிடைக்கவில்லை என்றால் வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலை இப்பகுதி மக்கள் புறக்கணிக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டது.