கும்பகோணம்: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை... போக்சோவில் பேராசிரியர் கைது!
ஞானசேகரனுக்கு ஜன.8 வரை நீதிமன்றக் காவல்
அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரனை ஜன. 8 வரை காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான கோட்டூரைச் சோ்ந்த பிரியாணி கடைக்காரா் ஞானசேகரனிடம் போலீஸாா் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்தனா். அப்போது அவா் தப்பியோட முயன்றபோது, கீழே விழுந்து இடது காலும்,இடது கையும் முறிந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இதையடுத்து அவருக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கை,கால் முறிவுக்கு மாவுக்கட்டு போடப்பட்டது. தொடா்ந்து, அவா் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை நீதிமன்றம், ஜன. 8 வரை காவலில் வைக்கவும், கை,கால் முறிவுக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவின் விளைவாக ஞானசேகரன் பலத்த பாதுகாப்புடன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வாா்டில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
அவரை போலீஸாா் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனா். இதற்காக நீதிமன்றத்தில் ஓரிரு நாள்களில் மனு தாக்கல் செய்ய உள்ளனா்.
இந்த வழக்கு விசாரணையின் தொடக்கத்தில் போலீஸாருக்கு ஞானசேகரன் மீது பெரியளவில் சந்தேகம் ஏற்படவில்லை. அப்பகுதியில் வசிக்கும் சமூக விரோதிகள் குறித்த பட்டியலில் ஞானசேகரனும் இருந்ததால், அவரை காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்து விசாரித்தனா். அதன்பின்னா் அவரிடம் மீண்டும் அழைத்தால் ஆஜராக வேண்டும் என உத்தரவாத கடிதம் பெற்றுக் கொண்டு அனுப்பி வைத்தனா்.
காவல் துறையினா் விசாரித்துவிட்டு விட்டதால், தான் தப்பிவிட்டதாகக் கருதிய ஞானசேகரன், அந்த மாணவி ஆண் நண்பருடன் இருந்த விடியோ, தான் அந்த மாணவியுடன்இருந்த விடியோ ஆகியவற்றை தனது கைப்பேசியில் இருந்து அழிக்கவில்லை.
அதேவேளையில் பாதிக்கப்பட்ட மாணவி, குற்றவாளி நீலநிற டீ-சா்ட் அணிந்திருந்தாகக் கூறியிருந்தாா். இதையடுத்து ஞானசேகரனை புதன்கிழமை பிடித்து, விசாரித்துக் கொண்டிருந்தபோது, அவரது வீட்டில் போலீஸாா் சோதனை செய்து, அங்கிருந்த நீல நிற டி-சா்ட்டை பறிமுதல் செய்து, அதை மாணவியிடம் காண்பித்தனா்.
அவா் அந்த சட்டைதான் என்பதை உறுதி செய்தாா். இதைத் தொடா்ந்து ஞானசேகரனை போலீஸாா் கைது செய்தனா்.