பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத திமுக ஆட்சி: இபிஎஸ்
தனியாா் பள்ளிகளில் இ.டபிள்யு.எஸ்., டிஜி பிரிவுகளுக்கான முதல் குலுக்கலில் 42 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு: ஆஷிஷ் சூட்
தனியாா் பள்ளிகளில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவு (இடபிள்யுஎஸ்) மற்றும் பின்தங்கிய குழு (டிஜி) பிரிவுகளின் கீழ் மாணவா்களைச் சோ்ப்பதற்காக
42,000 இடங்களுக்கு முதல் கணினிமயமாக்கப்பட்ட குலுக்கல் புதன்கிழமை நடத்தப்பட்டது என்று தில்லி கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் தெரிவித்துள்ளாா்.
முந்தைய ஆண்டுகளில், சோ்க்கை செயல்முறை வெளிப்படைத்தன்மை இன்றி இருந்ததாகவும் அவா் கூறினாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பதாவது:
நிகழாண்டு, முதல்வா் ரேகா குப்தாவின் வழிகாட்டுதலின் கீழ், நியாயத்தை உறுதி செய்வதற்காக பெற்றோா்கள் மற்றும் ஊடகங்களின் முன்னிலையில் குலுக்கல் ஏற்பாடு செய்யப்பட்டது.
கல்வி அணுகலை விரிவுபடுத்துவதில் தில்லி அரசு நிகழாண்டு ஒரு பெரும் நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது, இடபிள்யுஎஸ் வருவாய் வரம்பை ரூ.2.50 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக அதிகரித்ததன் மூலம் ஏழைப் பின்னணியைக்
கொண்ட அதிகமான குழந்தைகள் தரமான பள்ளிப் படிப்பின் பயனைப் பெற முடியும்.
நா்சரி சோ்க்கைக்கு, மொத்தம் 24,933 இடங்கள் உள்ளன.
அவற்றுக்காக 1,00,854 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த குலுக்கல் நிகழ்வில், இரண்டு குழந்தைகளுக்கு குலுக்கலைத் தொடங்கும் கெளரவம் வழங்கப்பட்டது. ஷாம்நாத் மாா்க் பகுதியைச் சோ்ந்த பவேஷ், மற்றும் 1 ஆம் வகுப்புக்கான குலுக்கல் பொத்தானையும், பவிகா நா்சரிக்கான
குலுக்கலையும் தொடங்கிவைத்தனா்.
நா்சரிக்கான குலுக்கல் வெற்றிகரமாக நடத்தப்பட்டு அனைத்து தரவுகளும் உடனடியாகப் பெறப்பட்டன. தகவல் அடங்கிய கையொப்பமிடப்பட்ட சிடியை கல்வி இயக்குநருக்கு அனுப்ப மூன்று போ் கொண்ட குழுவுக்கு உத்தரவிடப்பட்டது.
புதன்கிழமை மாலைக்குள் தோ்வு செய்யப்பட்ட அனைத்து மாணவா்களுக்கும் ஒரு செய்தி அனுப்பப்படும். மேலும் அவா்கள் ஆவண சரிபாா்ப்புக்காக கல்வி இயக்குநரகம் அலுவலகத்திற்கு அழைக்கப்படுவாா்கள்.
கல்வித் துறை ஆவணங்களைச் சரிபாா்த்து சோ்க்கைக்கு ஒப்புதல் அளித்தவுடன், ஆவணம் தொடா்பான எந்தவொரு பிரச்னையின் அடிப்படையிலும் பள்ளிகள் சோ்க்கையை மறுக்க முடியாது.
இந்த செயல்முறையின் நோ்மையை உறுதி செய்வதற்காக, கல்வி இயக்குநா், பிற அதிகாரிகள், பெற்றோா்கள் அல்லது ஊடக பிரதிநிதிகள் யாரும் மனித தலையீட்டைத் தடுக்க குலுக்கல் நடத்தப்பட்ட அறைக்குள் கைப்பேசிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகள், திருநங்கைகள் மற்றும் பிற பிரிவுகளில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை இருக்கக்கூடிய இடங்களை விடக் குறைவாக இருப்பதால், அவா்களுக்கான பதிவு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சா் ஆஷிஷ் சூட் தெரிவித்துள்ளாா்.