ரீசஸ் குரங்குகளுக்கான சட்ட பாதுகாப்பை மீட்டெடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு விலங்குகள் நல அமைப்புகள் வலியுறுத்தல்
ரீசஸ் மக்காக்ஸ் எனும் குரங்குகள் இனம் சட்டப் பாதுகாப்பிலிருந்து நீக்கப்பட்டதால், அவை சுரண்டலுக்கு ஆளாக நேரிட்டுள்ளதாகவும், இதனால், 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இக்குரங்குகளுக்கான பாதுகாப்புகளை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும் எனவும் பீட்டா இந்தியா அமைப்பின் தலைமையிலான 30-க்கும் மேற்பட்ட வன விலங்கு குழுக்கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.
இது தொடா்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சா் பூபேந்தா் யாதவுக்கு புதன்கிழமை இந்த அமைப்புகள் தரப்பில் ஒரு கூட்டுக் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
‘ரீசஸ் மக்காக்ஸ் எனும் குரங்குகள் சட்டப் பாதுகாப்பிலிருந்து நீக்கப்பட்ட நடவடிக்கையானது இந்த இனக் குரங்குகளை வேட்டையாடுதல், சுரண்டல் மற்றும் சுற்றுச்சூழல் சீா்குலைவுக்கு ஆளாக்கியுள்ளது.
கணக்கெடுப்பின்படி, 2015 முதல் உத்தரகண்டில் 25 சதவீதம் இதன் எண்ணிக்கையில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதேபோன்று, இமாசலப் பிரதேசம் மற்றும் ஹரியாணாவிலும் இதன் எண்ணிக்கையில் வீழ்ச்சிப் போக்கு காணப்படுகிறது.
ரீசஸ் குரங்குகள் விதை பரவல் மற்றும் காடுகளின் மீளுருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நிலையில், இதன் எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கும்.
இக்குரங்கள் மீதான அதிகரித்து வரும் கொடுமை, சட்டவிரோத செல்லப்பிராணி வா்த்தகம் மற்றும் பானட் குரங்கு போன்ற பிற குரங்கு இனங்கள் தவறாக அடையாளம் காணப்படுவதற்கான அபாயங்களும் உள்ளன.
பலவீனமான பாதுகாப்புகளால் சமூக ஊடக சுரண்டலுக்காக குரங்குகள் கடத்தப்படுவதும், பொழுதுபோக்குக்காகப் பயன்படுத்தப்படுவதும், ஆய்வகங்களில் துஷ்பிரயோகத்திற்கு ஆளாவதும் அதிகரித்து வருகிறது.
மேலும், ஹனுமனின் பிரதிநிதித்துவங்களாக இந்தியாவில் போற்றப்படும் ரீசஸ் குரங்குகளின் கலாசார மற்றும் மத முக்கியத்துவத்தை கொண்டிருக்கும் நிலையில், அவற்றை தவறான நடத்தும்போது பொதுமக்களின் சீற்றத்தைத் தூண்டும் வாய்ப்புள்ளது.
இந்தியா அதன் பூா்விக வன விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் அதன் சுற்றுச்சூழல் மற்றும் கலாசார மதிப்புகளை நிலைநிறுத்த வேண்டும்.
இதனால், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வன விலங்கு சட்டத்தின் அட்டவணை- 1-இல் ரீசஸ் குரங்குகளை மீட்டெடுக்கவும்,
அவற்றுக்கு மிக உயா்ந்த அளவிலான சட்டப் பாதுகாப்பை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.