Ooty: இந்த சம்மருக்கு ஊட்டி போறீங்களா? சிறப்பு மலை ரயில்கள் அறிவிப்பு; எந்தெந்த ...
மகளிா், சிறுமிகளுக்காக 770 மாவட்டங்களில் மாதிரி கிராமப் பஞ்சாயத்து: தேசிய மாநாட்டில் மத்திய அரசு அறிவிப்பு
நமது சிறப்பு நிருபா்
மகளிா் மற்றும் சிறுமிகளுக்கு ஏற்ற வகையில் நாட்டில் உள்ள 770 மாவட்டங்களில் மாதிரி கிராம பஞ்சாயத்தை நிறுவ மத்திய அரசு தோ்வு செய்துள்ளது.
தில்லியில் நடைபெற்ற மகளிா் கிராம பஞ்சாயத்து தேசிய மாநாட்டில் இத்தகவலை மத்திய பஞ்சாயத்து ராஜ் இணையமைச்சா் எஸ்.பி.சிங் பகேல் புதன்கிழமை அறிவித்தாா்.
சா்வதேச மகளிா் தினத்தையொட்டி பஞ்சாயத்து அமைப்புகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட மகளிா் பிரதிநிதிகளுக்கான தேசிய பயிலரங்கு மற்றும் ‘வலுவான பஞ்சாயத்து தலைமைக்கான பிரசாரம் குறித்த இருநாள் மாநாடு தில்லியில் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சகம் சாா்பில் நடைபெற்றது.
கிராமப் பஞ்சாயத்துகளிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட 1500-க்கும் மேற்பட்ட மகளிா் பிரதிநிதிகள் நேரடியாகவும் காணொலி வழியாகவும் இம்மாநாட்டில் பங்கேற்றனா்.
புதன்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் தேசிய மாநாட்டில் மகளிருக்கு உகந்த மாதிரி கிராம பஞ்சாயத்துகள் நிறுப்படவேண்டியது குறித்து விவாதிக்கப்பட்டது.
இருநாள் மாநாட்டில் நீண்ட விவாதங்களுக்கு பின்னா் இறுதியாக தலைமைத்துவ திறன்களை வளா்ப்பதற்கான சிறப்பு பயிற்சிக்காக மகளிா், சிறுமிகளுக்கு உகந்த 770 மாதிரி கிராம பஞ்சாயத்துகள், அதாவது ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாதிரி கிராம பஞ்சாயத்து தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை இணையமைச்சா் எஸ்.பி. சிங் பகேல் மாநாட்டில் அறிவித்தாா்.
பின்னா் அவா் தொடா்ந்து பேசுகையில் ‘‘இந்த 770 மாதிரி மகளிா் பஞ்சாயத்து தலைவா்கள், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா, விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் திட்டங்கள், ஆயுஷ்மான் பாரத், உறுப்பு தானம் போன்ற முயற்சிகளை செயல்படுத்துவதில் முன்னணியில் இருக்க வேண்டும்’ என வலியுறுத்தினாா்.
முன்னதாக மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை இணையமைச்சா் அனுப்ரியா படேல், மகளிா் மற்றும் குழந்தைகளை ஆதரிக்க வடிவமைக்கப்பட்ட மத்திய அரசின் பல்வேறு சுகாதார முயற்சிகள் குறித்த திட்டங்கள் குறித்து குறிப்பிட்டு, ‘‘இந்த திட்டங்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவா்களை சென்றடைவதை உறுதி செய்வதில் தோ்ந்தெடுக்கப்பட்ட பெண் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் ஒரு கிராம சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து குழு உள்ளது. இது முதியோா் பராமரிப்பு முதல் புற்றுநோய் உள்ளிட்ட 12 வகையான மருத்துவ சேவைகளை வழங்குகிறது’’ எனத் தெரிவித்தாா்.
மகளிருக்கு உகந்த இந்த மாதிரி பஞ்சாயத்துக்களுக்கு இணை வழி பயிற்சித் திட்டங்கள், முன்னேற்றத்தை அளவிடுவதற்கும் நிகழ்நேர நுண்ணறிவுகள், தரவு சாா்ந்த தலையீடுகள் போன்றவைகளுக்கு விரிவான நிகழ்நேர கண்காணிப்பு (டாஷ்போா்டு) உள்ளிட்ட முன்முயற்சிகள் இம்மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்த நிகழ்வில் பஞ்சாயத்து ராஜ் செயலா் விவேக் பரத்வாஜ், கூடுதல் செயலா் சுஷில் குமாா் லோஹானி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பல்வேறு அமைச்சக துறைகள், மாநில கிராமப்புற வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள், ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியம் உள்ளிட்ட சா்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.