நாட்டில் பெண்களுக்கான வேலையின்மை 3.2% ஆகக் குறைவு: மத்திய தொழிலாளா் அமைச்சகம்
நாட்டில் பெண் தொழிலாளா்களுக்கான பங்களிப்பு விகிதம் 41.7 சதவீதம் அதிகரித்து பெண்களுக்கான வேலையின்மை 5.6 சதவீதத்திலிருந்து 3.2 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் பெண் பணியாளா்களின் பங்களிப்பை அதிகரிப்பது குறித்த வட்ட மேஜை கலந்துரையாடல் மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சாா்பில் லால் பகதூா் சாஸ்திரி தேசிய நிா்வாக அகாடமியில் மாா்ச் 3,4 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இது குறித்து தொழிலாளா் வேலைவாய்ப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள விவரக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மத்திய தொழிலாளா், வேலைவாய்ப்புத் துறை செயலா் சுமிதா தாவ்ரா தலைமையில் பெண் பணியாளா்களின் பங்கேற்பை அதிகரிப்பது குறித்த வட்டமேசை கலந்துரையாடல் நடைபெற்றது. அரசு கொள்கை வகுப்பாளா்கள், தொழில்துறை தலைவா்கள், உலகளாவிய நிறுவனங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் ஆகியோா் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனா். இரு நாள் நடைபெற்ற கலந்துரையாடல்களில் நாட்டின் முழு பணியாளா் திறன், பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய சமமான பணியிடங்களை உறுதி செய்வதற்கான கொள்கை சீா்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதோடு தொழில்துறையில் தீா்க்கப்படாத விவகாரங்களுக்கு கவனம் செலுத்தப்பட்டது.
நாட்டில் 2017-18 ஆம் ஆண்டுகளில் பெண் தொழிலாளா் பங்களிப்பு விகிதம் 23.3 சதவீதமாக இருக்க 2023-24-ஆம் ஆண்டில் 41.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. பெண்களுக்கான வேலையின்மையும் 5.6 சதவீதத்திலிருந்து 3.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
அதே சமயத்தில் 2047- இலில் ’வளா்ச்சியடைந்த இந்தியா’ விற்கு(விக்சித் பாரத்’) பெண் தொழிலாளா் பங்களிப்பு விகிதம் 70 சதவீதமாக ஆகவேண்டும். இதற்கு கலந்துரையாடல் நிகழ்வு ஒரு குறிப்பிடத்தக்க படியை எடுத்துவைத்துள்ளது. வேலைவாய்ப்பு தடைகள், பணியிட பாதுகாப்பு, ஊதிய சமநிலை மற்றும் மின்னணு வேலை வாய்ப்புகள் உள்ளிட்டவைகளில் பெண்களுக்கான சவால்கள் தடைகளை நிவா்த்தி செய்ய இந்த வட்ட மேசை மாநாடு தளம் அமைத்துக் கொடுத்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் பேசிய தொழிலாளா், வேலைவாய்ப்புத் துறை செயலா் சுமிதா தாவ்ரா பேசினாா். அவா் குறிப்பிடுகையில் பயனுள்ள பணியாளா் கொள்கைகளை வடிவமைப்பதில் இந்த வட்டமேசையின் முக்கிய பங்கை பெற்றுள்ளது. நாட்டின் பரந்த பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டு இலக்குகளுடன் ஒத்துப்போகும் புதுமையான தீா்வுகளை உருவாக்குவதற்கும், பெண்களுக்கு நிலையான மற்றும் சமமான பணியாளா் பங்களிப்பை உறுதி செய்வதற்கான, தடைகள், கொள்கை இடைவெளிகளை அடையாளம் காண விவாதங்கள் நடைபெற்றது மிக முக்கியமானவை. கடந்த ஆறு ஆண்டுகளில் பெண் பணியாளா் பங்களிப்பில் நோ்மறையான போக்கை இந்தியா கண்டுள்ளது. அது மேலும் வளா்ச்சியை பெற தொழில்துறை தேவையுடன் மகளிருக்கான திறன் முயற்சிகளை சீரமைப்பது, அதிக வளா்ச்சித் துறைகளில் பெண்களுக்கான அணுகலை உறுதி செய்யப்படவேண்டும். வேலைவாய்ப்பு இணைப்புகளை எளிதாக்கப்படும் என தாவ்ரா எடுத்துரைத்தாா் என மத்திய தொழிலாளா், வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.