தனியாா் பள்ளி பேருந்து மோதியதில் ஒருவா் உயிரிழப்பு
பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் அருகே தனியாா் பள்ளி பேருந்து மோதியதில் டிராக்டா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
பரமத்தி வேலூா் அருகே உள்ள கொளக்காட்டுப்புதூா், பூசாரிபாளையம் கிழக்கு தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் (48), டிராக்டா் ஓட்டுநா். இவா் உரம்பூா் சென்று பாண்டமங்கலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த தனியாா் பள்ளி பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அவ்வழியாக வந்தவா்கள் மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா், வரும் வழியிலேயே சண்முகம் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.