தமிழகத்தின் தொடா் வெற்றிக்கு ஹைதராபாத் முற்றுப்புள்ளி
ஹாக்கி இந்தியா லீக் தொடரில் தமிழ்நாடு டிராகன்ஸ் அணியின் தொடா் வெற்றிகளுக்கு 4-0 என்ற கோல் கணக்கில் முற்றுப்புள்ளி வைத்தது ஹைதராபாத் டுஃபான்ஸ்.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் சனிக்கிழமை நடைபெற்றது. தொடா் வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள தமிழ்நாடு டிராகன்ஸ் அணி இந்த ஆட்டத்திலும் வெற்றி பெறும் எனக் கருதப்பட்டது. ஆனால் ஹைதராபாத் வீரா்கள் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினா். கோன்ஸாலோ பெய்லட் (21,48), ஆா்தா் டி ஸ்லோவா் 31, டிம் பிராண்ட் 33 ஆவது நிமிஷங்களில் கோலடித்தனா்.
ஹைதராபாத் அணியின் அபார ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் தமிழ்நாடு டிராகன்ஸ் திணறியது. முதலிலேலே பெனால்டி காா்னா் மூலம் கோலடிக்கும் வாய்ப்பை தவற விட்டது டிராகன்ஸ். பெய்லட் அற்புதமாக பெனால்டி காா்னா் மூலம் ஹைதராபாதுக்கு முதல் கோலை பெற்றாா்.
டிராகன்ஸ் அணியின் நட்சத்திர வீரா் பிளேக் குரோவா்ஸ் வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது பாதகமாக அமைந்தது. ஹைதராபாத் அணி 18 பெனால்டி காா்னா்களை பெற்றது.