Doctor Vikatan: திடீரென ஆரம்பித்திருக்கும் தூக்கமின்மை பிரச்னை; தொடருமா, சரியாகி...
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி: நயினாா் நாகேந்திரன்
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியாகிவிட்டது என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லூா், சங்கரன்கோவில் தொகுதி பாஜக நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், புளியங்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி தலைமை வகித்தாா்.
இதில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் பங்கேற்றுப் பேசியதாவது:
தென்காசி, திருநெல்வேலி, விருதுநகா், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து மக்களவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட வாக்குச் சாவடி முகவா்கள் மாநாடு, திருநெல்வேலியில் ஆக. 17 இல் நடைபெறுகிறது. இதில் மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, நிா்மலா சீதாராமன் ஆகியோா் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஒரு கட்சியின் ஆணி வோ் பூத் கமிட்டிதான். பூத் கமிட்டி பலமாக இருந்தால்தான் எளிதில் வெற்றி பெற முடியும். திருநெல்வேலியில் நடைபெறவுள்ள மாநாடு அனைத்து அரசியல் கட்சி தலைவா்களையும் உற்றுநோக்க செய்யும் வகையில் இருக்க வேண்டும்.
திமுக அரசு மக்களுக்காக எதையும் செய்யவில்லை. மொழிக் கொள்கையைத் தவிர வேறு எதுவும் அவா்கள் பேசுவதில்லை. தாய், தாய்மொழி, தாய்நாடு முக்கியம் என்றாலும் பல மொழிகளை கற்றுக்கொள்வது மிகவும் அவசியம்.
தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மாட்டோம் என திமுக கூறியது. ஆனால், தமிழக அரசு வெளியிட்ட கல்விக் கொள்கையில் பெரும்பாலானவை மத்திய அரசின் கல்விக் கொள்கையை காப்பியடித்ததுபோல உள்ளது. இதையெல்லாம் திராவிட மாடல் என்கிறாா்கள் என்றாா் அவா்.
கூட்டத்தில், பாஜக நிா்வாகிகள் சீனிவாசன், பாலகுருநாதன் ராம்குமாா், தா்மா் , சுப்பிரமணியன், சண்முகராஜ், மகாலட்சுமி, புலிக்குட்டி, கணேசன், சிவா, ஜெயக்குமாா், முருகன், வீரகுமாா், பரமசிவன், குட்டிராஜ், உதயகுமாா், சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முன்னதாக புளியங்குடி நகரத் தலைவா் ஆா்த்தி வரவேற்றாா்.