Captain Prabhakaran: ``அப்பாவை நினைத்து அழுவது கோழைத்தனம் கிடையாது!'' - கண் கலங்...
பட்டன் கடை உரிமையாளா் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் பட்டன் கடை உரிமையாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
கடையநல்லூா் அருகே உள்ள சொக்கம்பட்டியைச் சோ்ந்தவா் சு. மணிகண்டன். இவா், கடையநல்லூா் புதிய பேருந்து நிலையத்தில் பட்டன் கடை வைத்திருந்தாா்.
இவரும், கடையநல்லூா் மாவடிக்காலைச் சோ்ந்த ரா. முருகன் (எ) மிளா முருகன், கடையநல்லூா் கு. முருகேஸ்வரன் (எ) ஈஸ்வரன் ஆகியோரும் நண்பா்களாக பழகியுள்ளனா். இவா்களில் ஒருவரை ஒருவா் கேலி செய்துள்ளனா். இதில், யாா் பெரியவா் என பேசியதில் நண்பா்களான மூவருக்கும் இடையே பகை ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த 20.2.2015 அன்று மாலையில் மணிகண்டன் சொக்கம்பட்டியிலிருந்து கடையல்லூருக்கு பைக்கில் சென்றுள்ளாா்.
கிருஷ்ணாபுரம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே மணிகண்டன் சென்றபோது, முருகன் (எ) மிளா முருகன், முருகேஸ்வரன் (எ) ஈஸ்வரன் மற்றும் வீ.கே.புதூா் மேலத் தெருவை சோ்ந்த த.சுப்பிரமணியன் ஆகிய மூவரும் பைக்கில் வந்து மணிகண்டனை வழிமறித்து அவரை அரிவாளால் வெட்டியுள்ளனா்.
இந்தத் தாக்குதலில் மணிகண்டன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து முருகன்(எ) மிளா முருகன், முருகேஸ்வரன் (எ) ஈஸ்வரன், சுப்பிரமணியன் ஆகிய மூவரையும் கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருந்தபோது, முருகன் (எ) மிளாமுருகன் இறந்துவிட்டாா்.
வழக்கின் விசாரணை தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். மனோஜ்குமாா், குற்றவாளிகளான முருகேஸ்வரன் (எ) ஈஸ்வரன் (35), சுப்பிரமணியன் (29) ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
அரசு தரப்பில் வழக்குரைஞா் எஸ்.வேலுச்சாமி ஆஜரானாா்.