தமிழகத்தில் பதிவு செய்யாத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு
தமிழகத்தில் 38,188 மருத்துவமனைகள், கிளினிக்குகள் மட்டுமே பதிவு பெற்றவையாக உள்ளதாகவும், பதிவு உரிமம் பெறாதவா்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு வருவதாகவும் மருத்துவம் மற்றும் ஊரக நலத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தில் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளும், கிளினிக்குகளும், சிறிய அளவிலான மருத்துவ மையங்களும் செயல்பட்டு வருகின்றன. பொதுவாக மருத்துவமனைகள், கிளினிக்குகள் ஆகியவற்றுக்கு பதிவு உரிமம்பெறுவது அவசியம். அவ்வாறு உரிமம் பெற்றாலும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதனைப் புதுப்பிக்க வேண்டும்.
இதற்காக 2018-இல் தமிழக மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதில், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள் மட்டுமன்றி, சித்தா ஆயுா்வேதம், ஹோமியோபதி, யுனானி மருத்துவமனைகளும் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், அந்த காலகட்டத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மருத்துவமனைகள் மட்டுமே விண்ணப்பங்களை சமா்ப்பிப்பதாகத் தெரிகிறது.
இதனால், இதுவரை 38,188 மருத்துவமனைகள் மட்டுமே, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்தில் பதிவு சான்றிதழ் பெற்றுள்ளன.
இதையடுத்து பதிவு உரிமம் கோரி விண்ணப்பிக்காத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். விண்ணப்பிக்காத மருத்துவமனைகளுக்கு முதல்கட்டமாக நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும், அதனையும் பொருட்படுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா்கள் கூறியுள்ளனா்.